Thursday, July 22, 2010

டொரஸ் தொடர்வது கேள்விக்குறியே !

ஸ்பெயின் அணி வீரரான பெர்னான்டோ டொரஸ் லிவர்புல் அணியில் நிலைத்திருப்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் ஹொட்ஜ்ஸன் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் தாறுமாறான தோல்விகளையடுத்து லிவர்புல் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹொட்ஜ்ஸன் நியமிக்கப் பட்டிருந்தார். இவர் ஜோ கோலை அணிக்காக ஒப்பந்தம் செய்தமையானது அணி ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மற்றொரு வீரரான டொரஸின் நிலைமை சந்தேகமாகவே உள்ளது.

டொரஸ் அத்லெடிக்கோ மட்ரிடிலிருந்து விலகி இவ் அணியில் இணைந்த ஓரிரு சீசன்களுக்கு சிறப்பாக செயற்பட்டிருந்தாலும், பின்னர் அவரால் அவ்வளவு பெரிதாக விளையாட முடியவில்லை. நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் சோபிக்காததால் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளானார். சென்ற வருடத்தோடு அவரது ஒப்பந்தம் முடிந்திருந்தது. இந் நிலையில் “டொரஸ் தொடர்ந்தும் இங்கேயே விளையாடவே நான் விரும்புகிறேன். அவர் இருந்தால் அணியை இன்னும் வலுப்படுத்தலாம்” என ஹொட்ஜ்ஸன் கூறியுள்ளார்.



19வது தடவையாகவும் வெல்வோம் – ப்ளெட்ச்சர்

ஆங்கில பிறீமியர் லீகில் இந்த முறை வென்று, 19வது தடவையாகவும் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை புரிவோம் என மான்செஸ்டர் யுனைட்டட் வீரரான ப்ளெட்ச்சர் கூறியுள்ளார்.

ஆங்கில பிறீமியர் லீகில் லிவர்புல், மான்செஸ்டர் யுனைட்ட் என்பன தலா 18 முறை கிண்ணத்தைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றன. மான்செஸ்டர் யுனைட்டட் கடந்த லீகில் 1 புள்ளி வித்தியாசத்தில் செல்சீயிடம் கோப்பையை கோட்டை விட்டது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

“ நாங்கள் எப்போதுமே சாதனைகளைத் தகர்க்கவே விரும்புகிறோம். கடந்த சீசனில் பெற்ற அடி எங்களுக்குத் தகுந்த பாடமாக அமைந்து விட்டது. இம்முறை எமது அணி பலமாகவே களமிறங்கும். கிக்ஸ், சோலஸ் போன்ற முதிர்ச்சி வீரர்களின் அனுபவம் கை கொடுக்கும். அவர்களது அறிவுரைகளின் படி நான், ரூனி, ஓ’ஸீ, பிரவுன் போன்றோர் முழுமூச்சுடன் செயற்படுவோம்” எனக் கூறினார்.

அங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடித்த மான்செஸ்டர் யுனைட்டட் வீரர்கள் உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடியாக லீகில் நன்கு செயற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Wednesday, July 21, 2010

எந்த மாற்றமும் இல்லை – ரொனால்டினோ, சில்வா, ஜெரார்ட்

ரொனால்டினோ, சில்வா இருவரும் ஏ.சி மிலானில் தொடர்ந்து விளையாடுவார்கள் என அந்த அணியின் தலைவர் புர்லுஸ்கானி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் பெக்கம், ரொனால்டினோவை கலக்சிக்கு வருமாறு விடுத்த அழைப்பையடுத்து ஏ.சி மிலான் அணித் தலைவர் ரொனால்டினோவுடன் புதிய ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவ்வொப்பந்தத்திற்கு ரொனால்டினோ சம்மதித்து விளையாட ஒப்புக் கொண்டுள்ளார். இதே போல் அவ்வணியின் பிறேசில் வீரரான தியாகோ சில்வாவும் வேறு அணிக்கு மாற்றப்பட மாட்டார் எனக் கூறப்படுகின்றது.

இன்னொரு புறம் ரியல் மட்ரிட்டால் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்டுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரித்த அவர்,

“நான் இப்போது லிவர்பூலில் இருந்து மாறுவதாக இல்லை. எனது நண்பரான ஜோ கோலின் வருகை எங்களுக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது.. இந்த சீசனில் லிவர் பூலை பிறீமியர் லீக் சம்பியனாக்குவதே என் கனவு” எனக் கூறியுள்ளார்.


Tuesday, July 20, 2010

பலமாகும் ரியல் மட்ரிட் !!!

mourinhoகடந்த ஆன்டு ஸ்பெயினின் லா லீகாவில் இறுதிப் போட்டியில் பார்சிலோனாவிடம் தோற்று 2ம் இடத்தைப் பெற்ற ரியல் மட்ரிட் இந்த சீசனில் பலமிக்க அணியாக வருகை தரவுள்ளது.

ரியல் மட்ரிட் ஏற்கெனவே சிறப்புமிக்க திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது.

· இகர் கஸில்லஸ் (ஸ்பெயின்)

· கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்)

· காகா (பிறேசில்)

· ஹிக்வாயின் (ஆர்ஜென்டீனா)

· செர்ஜியோ ரேமொஸ் (ஸ்பெயின்)

இவர்களுல் காகா, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2007ம், 2008ம் ஆண்டுகளுக்கான சிறந்த வீரர் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. இகர் கஸில்லஸ் இந்த தசாப்தத்தில் உலகின் மிகச்சிறந்த கோல் காப்பாளராக விளங்குகிறார். ரேமொஸ் கஸ்ட்ரோல் நிறுவனத்தால், நடந்து முடிந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த வீரராக கருதப்படுகிறார். ஹிக்வாயின் இவ்வுலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுக்காக 5 போட்டிகளில் 4 கோல்கள் போட்டிருந்தார்.

2009 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை இன்டர் மிலான் சுவீகரிக்கும் போது அதன் பயிற்றுவிப்பாளராக இருந்த மோரின்ஹோ, தற்போது ரியல் மட்ரிட்டின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவரது அனுபவமும் இம்முறை அணிக்கு கைகொடுக்கலாம். இவர் அணியின் குறை நிறைகளை ஆராய்ந்து மேலும் பல வீரர்களை சேர்க்க உள்ளார்.

ரியல் மட்ரிட் அணி ஊஸில், லாம், ஸ்வைன்ஸ்டைகர் ஆகிய ஜெர்மனி வீரர்களுல் ஒருவரையாவது இம்முறை எடுத்து விடும் எனக் கருதப்படுகிறது. அது மட்டுமல்லாது அணியின் தடுப்புப் பகுதியை பலமூட்ட பிறேசிலின் மிகச் சிறந்த வீரரான மெய்க்கானை சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்டர் மிலான் பட்டம் வெல்வதில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே வரப் போகும் சீசன் ரியல் மட்ரிட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கப் போவது மட்டும் உறுதி!!!


Saturday, July 17, 2010

ரொனால்டினோ லொஸ் ஏஞ்சல்ஸ் போவதே நல்லது – பெக்கம்

பிறேசில் அணி நட்சத்திரமான ரொனால்டினோ சமீப காலமாக சிறப்பாக செயல்படாமையாலும் உடற்கோப்பு இல்லாமையாலும் பயிற்சியாளர் துங்காவால் நீக்கப் பட்டார். இதனால் இவர் இவ்வுலகக் கோப்பை போட்டிகளில் விளையாடாதமை குறிப்பிடத் தக்கது.

தற்போது ஏ.சி மிலான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப் பட்ட இவரை, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கலக்சி அணிக்காக விளையாடுமாறு நெருங்கிய நண்பரும் பிரபல இங்கிலாந்து வீரருமான டேவிட் பெக்காம் அறிவுரை வழங்கியுள்ளார். எனினும் மிலான் அணியின் நிர்வாகி ரொனால்டினோவை சந்தித்து அவரது ஒப்பந்தத்தை 2011இலிருந்து 2013 ஆக நீட்டிக்க கலந்தாலோசிப்பார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டினோ,

“ எனது தம்பிக்கு மிலானில் தங்கவே ஆசையாக உள்ளதாக கூறுகிறான். எனினும் எல்லோருடனும் கலந்தாலோசித்த பின்பே எனது முடிவை வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.


ஜெர்மனி வீரர்களைத் துரத்தும் ரியல் மட்ரிட்


உலகிலே அதிக எண்ணிக்கையான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ரியல் மட்ரிட் கழக அணி ஜெர்மனி சார்பாக விளையாடி உலகக் கோப்பையில் பிரகாசித்த மெஸட் ஊஸிலை சேர்த்துக் கொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறது. மெஸட் தற்போது ஜெர்மனியின் வெர்டர் பிரமன் கழகத்துக்காக விளையாடி வருகிறார்.


ஆர்ஜென்டீனாவின் ஹிக்வாயின், பிறேசிலின் ககா, ஸ்பெயினின் கஸில்லஸ், போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற தலை சிறந்த வீரர்களைத் தன்னகத்தே கொண்ட ரியல் மட்ரிட் அணியானது ஜெர்மன் வீரரொருவரை சேர்த்துக் கொள்வதன் அணியை மேலும் பலப்படுத்த எண்ணுகிறது. இதற்காக ஊஸில், கெயிட்ரோ, ஸ்வைன்ஸ்டைகர் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ஊஸிலை வாங்குவதிலேயே அதிக விருப்பம் காட்டுவதாக தெரிகிறது.


Friday, July 16, 2010

விலகுகிறார் ஹென்றி ! பிரான்ஸ் எதிர்காலம்??

பிரான்ஸ் அணியின் பிரபல முன்கள வீரரான தியரி ஹென்றி தான் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கோப்பையில் முதல் சுற்றுடனேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்
“பிரான்ஸ் அணியுடனான எனது காலம் முடிவுக்கு வந்துள்ளது. நான் இவ்வணிக்காக விளையாடியது குறித்து என்றுமே பெருமிதமடைவேன். பிரான்ஸ் அணி இன்னும் வலுவான அணியொன்றாகவே உள்ளது.”
தியரி ஹென்றி பிரான்ஸ் கால்பந்தாட்ட வரலாற்றிலே தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தலைசிறந்த வீரராவார். இவர் அவ்வணி சார்பாக 116 போட்டிகளில் விளையாடி 52 கோல்களை அடித்துள்ளார். 1998ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமாயிருந்தவர்களுல் இவர் முக்கியமானவர்.

இவரது லீக் சாதனைகளும் கணக்கிலடங்காதவை. ஆர்சல் அணி சார்பாக 256 போட்டிகளில் விளையாடி 170க்கும் மேற்பட்ட கோல்களையடித்து அவ்வணிக்காக அதி கூடிய கோலடித்தவராக திகழ்கிறார். இறுதியாக பார்சிலோனா அணிக்கு மாற்றப் பட்ட இவர் அங்கும் பல கோல்களை அடித்துள்ளார்.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த ஒருவர் விலகுவதானது பிரான்ஸ் அணிக்கு பாரிய பின்னடைவாகும். பிரான்ஸ் அணி முதலில் பலவீனமான அணியாக இருந்து ஜஸ்ட் பொன்டெய்னின் வரவுக்கு பின் சிறிது பிரபலம் பெற்றது. எனினும் 90களின் பிற்பகுதியில் விளையாடிய ஸிடேன், பெடிட், ஹென்றி போன்ற சிறந்த வீரர்களின் உதவியுடன் 1998 உலக சாம்பியனாகவும், 2000ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனாகவும், 2006 இரன்டாமிடத்தையும் பெற்று கால்பந்தாட்ட உலகின் ஆதிக்க சக்திகளில் தானும் ஒன்று என நிரூபித்தது.
ஆனால் தற்போதுள்ள பிரான்ஸ் அணி உலகக் கோப்பைக்கு தெரிவாகவே திணறிக் கொன்டிருந்தது. அயர்லாந்துடனான போட்டியில் ஹென்றி பந்தைக் கையால் தட்டி கோல் போட உதவியதால், அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பிரான்ஸின் பயிற்றுவிப்பாளர் உலகக் கோப்பை போட்டிகளில் ஹென்றியை பிரதி வீரராகவே களமிறக்கினார். அதனால் இவரால் சரிவர செயற்பட முடியாது போனது. இதுவே கூட பிரான்ஸ் அணி வெளியேறியமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம். எது எப்படியோ பிரான்ஸ் வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Tuesday, July 13, 2010

பிரகாசிக்கத் தவறிய வீரர்கள் !!!

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் முடிவு பெற்று விட்டன. ஸ்பெயின் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நாடு திரும்பியுள்ளது. அப் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வில்லா, முல்லர், இனியெஸ்டா போன்றோர் அனோரது பாராட்டைப் பெற்றுள்ளனர். எனினும் போட்டி தொடங்க முதலே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வீரர்கள் சோபிக்கத் தவறி ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர். உண்மையைச் சொல்லப் போனால் இவர்கள் சோபிக்காமைக்கு காரணமே ரசிகர்கள் இவர்கள் மீது வைத்திருந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்புத்தான். அவ்வாறான ஒரு வீரர்களைத் திருப்பி பார்ப்போம். –

1. லியோனல் மெஸி


ஆர்ஜென்டீனாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், உலகின் முதல் நிலை வீரராகவுமுள்ள இவரைப் பற்றி நன்கறிந்தவர்களுக்கு இப் போட்டித் தொடரில் அவரது ஆற்றல் குறைந்தது போலவே தென்படாது. எனினும் 2009 லீக் இல் பார்சிலோனா அணி சார்பாக 42 கோல் போட்ட இவருக்கு இப் போட்டித் தொடரில் ஒரு கோலேனும் போட முடியாது போனது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. எதிரணி வீரர்கள் இவரையே சுற்றி வளைத்துக் கொண்டிருந்தமையால் இவருக்கு கோல் போடும் வாய்ப்பு குறைவாகவே கிடைத்தது. எவ்வாறாயினும் இவர் கொடுத்த பாஸ்களாலேயே டெவேஸ், ஹிக்வாயின் போன்றோர் கோலடிக்க முடிந்தமையும் மறுக்க முடியாதது.


2. கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரசிகர்களால் CR7 என செல்லமாக அழைக்கப்படும் இவர் எதிரணியினரைத் திக்குமுக்காடச் செய்யும் ஆட்டத்திற்குப் பெயர் போனவர். இவறது திறமை காரணமாகவே ரியல் மாட்ரிட் இவரை 80 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியது. அவ்வணி சார்பாக முதல் சீசனில் 35 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டு சாதனை படைத்தார். 2006 போர்த்துக்கல் வரை முன்னேற முக்கியமான காரணமே இவர்தான் என அறியாத சிலர் எனினும் போர்த்துக்கல் அணிக்காக இவரது திறமை வெளிக் கொண்டு வரப்படுவதில்லை எனக் குற்றஞ் சாட்டுகின்றனர். இம் முறை அவ்வணியின் தலைமைப் பொறுப்பு இவரிடம் கையளிக்கப்பட்டிருந்ததால் இவரால் முன்னர் போல வேகமாகவும், அசால்ட்டாகவும் விளையாட முடியவில்லை அதனால் இம் முறை ஒரே ஒரு கோலையே போட்டிருந்தார்.


3. வேயன் ருனி
பெக்கம் இல்லாத இங்கிலாந்து அணியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவரின் தலையிலேயே கட்டப்பட்டிருந்தது. லாம்பார்ட், ஜெரார்ட், பேர்டினான்ட் போன்ற சிறந்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருந்தும் அவர்களது திறமைகளை ஒருங்கிணைக்க முடியாது போனதால் அவ்வணி வெளியேறியது. இவர் ஜெர்மனியுடனான போட்டியில் கோல் போடாதது குறித்து ரசிகர்கள் கூச்சல் எழுப்பியபோது, இவர் கமராவைப் பார்த்து ரசிகர்களைத் திட்டியதால் ரசிகர்களிடையே மதிப்பும் இழந்து நிற்கிறார். இவரும் இப் போட்டித் தொடரில் ஒரு கோலையும் போடவில்லை.


4. பெர்னான்டோ டொரஸ்
ஸ்பெயின் இம்முறை உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தாலும் அதில் இவரது பங்களிப்பு மிகக் குறைவு என்பதே உண்மையாகும். 2008 ஸ்பெயின் அணி ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லக் காரணமாக அமைந்த பின்பு இவரிடத்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்தகுத் தக்கவாறு இவரும் லீக் சீசனில் சிறப்பாகவே ஆடி வந்தார். எனினும் உலகக் கோப்பைக்கு வந்த பின்பு எல்லாம் சொதப்பத் தொடங்கியது. கோலடிக்க அதிக வாய்ப்புக்கள் கிடைத்த போது அவற்றை வீணடித்தார். சக முன்கள வீரரான டேவிட் வில்லா 3..4.. என கோலடித்துக் கொண்டு போகவே இவர் மீதான நம்பிக்கையும் குறைந்து கொண்டே போனது. இறுதியில் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் மாற்று வீரராக களமிறங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப் பட்டார்.


5. ககா
ரொனால்டோ, ரொனால்டீனா வரிசையில் இம்முறை உலகக் கோப்பையில் பிறேசிலின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர்தான் பிறேசில் மத்தியகள வீரர் ககா. சென்றமுறை உலகக் கோப்பையில் ரொனால்டீனோவே தடுமாறியபோது சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வீரராக வலம் வந்தார். லீக் சீசனிலும், தகுதிநிலை ஆட்டங்களின் போதும் தானிருக்கும் அணியின் வெற்றிக்கு உதவியதால் இவர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. எனினும் தவறாக பாஸ் செய்து கொண்டிருந்தமை, முரட்டுத் தனமான ஆட்டத்தில் ஈடுபட்டமை என்பவற்றால் ரசிகர்களுக்கு இவர் மேலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கி, பிறேசில் வெளியேறியதும் இல்லாமல் போனது.


Sunday, July 11, 2010

உலகக்கிண்ண விருதுகள்

பீபா 2010 உலகக் கிண்ணத்திற்கான விருதுகள் இறுதிப் போட்டி முடிவடைந்த பின் பரிசளிக்கப் பட்டன. அவ்விருதுகள் முறையே –


1. தங்கப் பாதணி விருது

ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளின் போதும் அதிக கோல் அடித்தவருக்கு இது வழங்கப்படும். இம்முறை ஸ்பெயினின் வில்லா அல்லது நெதர்லாந்தின் ஸ்னைடருக்கே இது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இருவரும் இறுதியாட்டத்தில் எக் கோலும் அடிக்கவில்லை. இருவரும் தலா 7 போட்டிகளில் விளையாடி 5 கோல்கள் போட்டிருந்தனர். இதனால் 6 போட்டிகளில் விளையாடி 5 கோல்கள் போட்ட முல்லருக்கு இது வழங்கப் பட்டது.


வெற்றியாளர் – தோமஸ் முல்லர் (ஜெர்மனி)

6 போட்டிகளில் 5 கோல்கள்



2. சிறந்த இளம் வீரர் விருது

உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 25 வயதுக்கு வீரருக்கு இது வழங்கப்படும். இம்முறை தங்கப் பாதணி வென்ற முல்லருக்கே இவ்வீருதும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு விருதுகளையும் பெறும் 2வது வீரர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.


வெற்றியாளர் – தோமஸ் முல்லர் (ஜெர்மனி)



3. தங்கக் கையுறை விருது

ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளின் போதும் சிறப்பாகச் செயல்படும் கோல் காப்பாளருக்கு இது வழங்கப்படும். ஸ்பெயின் வீரர் இகர் கஸில்லஸ் 7 போட்டிகளில் விளையாடி 2 கோல்களை மட்டும் தடுக்கத் தவறியதோடு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது ஒரு கோலையும் விடாமல் சிறப்பாக விளையாடியமையால் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்து.


வெற்றியாளர் – இகர் கஸில்லஸ் (ஸ்பெயின்)



4. தங்கப் பந்து விருது

ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டித் தொடர் முழுதும் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தும் வீரருக்கு வழங்கப்படும் இவ்விருதானது இம்முறை உருகுவேயை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்ற போர்லானுக்கு வழங்கப்பட்டுள்ளது.


வெற்றியாளர் – டியாகோ போர்லான் (உருகுவே)




5. நேர்த்தியான அணி விருது

ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளின் போதும் விதிமுறைகளுக்கேற்ப நேர்த்தியாக விளையாடும் அணிக்கு இது வழங்கப்படும்.


வெற்றி பெற்ற அணி – ஸ்பெயின்


கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் !!!

உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டம் 11.07.10 நள்ளிரவு ஜொஹன்னஸ்பேர்க் மைதானத்தில் நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் மேலதிக நேரத்தின் போது கோலடித்து ஸ்பெயின் அணி 1-0 என வெற்றி பெற்றது.


போட்டி தொடக்கம் முதல் பந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 5வது நிமிடத்தில் ஸ்பெயினின் க்ஸாவி அடித்த ப்றீ கிக்கை ரேமொஸ் தலையால் தட்ட நெதர்லாந்து கோல் காப்பாளர் ஸ்டெகலன்பேர்க் அதை தடுத்தார். இடைவேளையின் பின் ஸ்பெயினுக்கு அரையிறுதியில் வெற்றி தேடித்தந்த புயொல் ஹெயிடிங்காவின் தலைக்கு மேலாக அடித்த பந்தை கப்டிவில்லா சரியாக அடிக்காமையால் கோல்போடும் வாய்ப்பு கைநழுவிப் போனது.


பின்னர் தெதர்லாந்தின் ரொபர்ன், குயிட்டிடமிருந்து பெற்ற பந்தை புயொல், பிக் ஆகியோரைத் தாண்டிச்சென்று காலால் உதைக்க ஸ்பெயின் கோல் காப்பாளர் கஸில்லஸ் அதை அபாரமாகத் தடுத்தார். இதேபோல 82வது நிமிடத்தில் ரொபர்னுக்கு கிடைத்த வாய்ப்பும் கஸில்லஸால் முறியடிக்கப்பட்டது. 90வது நிமிடத்திற்குப் பின்னும் ஒரு கோலும் அடிக்கப்படாமையால் போட்டி மேலதிக நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலதிக நேரத்தில் 2வது முறையாகவும் மஞ்சள் அட்டை காட்டப்பட்ட நெதர்லாந்தின் ஹெயிடிங்கா வெளியேற்றப்பட நெதர்லாந்து 10 பேரைக் கொண்டே ஆடியது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயினின் இனியெஸ்டா 116வது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றி தேடித் தந்தார்.

இதன் முலம் உலகக் கோப்பையை வென்ற 8வது அணியாக ஸ்பெயின் பதிவானதோடு, 3முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் கிண்ணத் வெல்லாத அணியாக நெதர்லாந்து பதிவானது.

Netherlands (NED) Statistics Spain (ESP)
13 Shots 18
5 Shots on goal 6
0 Goals Scored 1
28 Fouls Committed 19
18 Fouls Suffered 28
6 Corner kicks 8
18 Free kicks Shots (scored) 23
0 / 0 Penalty Kicks (Goals/Shots) 0 / 0
7 Offsides 6
0 Own Goals 0
7 Yellow cards 5
1 Second yellow 0
0 Red Cards 0
36 Actual playing time 48
43% Possession (%) 57%

ஜெர்மனிக்கு ஆறுதல் வெற்றி !!!

அரையிறுதியில் ஸ்பெயினிடம் தோல்வி கண்ட ஜெர்மனி அணி 3ம் இடத்திற்கான போட்டியில் உருகுவேயை எதிர் கொண்டு 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. இப் போட்டியில் சுகயீனம் காரணமாக ஜெர்மனியின் குளோஸ் பொடல்ஸ்கி லாம் ஆகியோர் விளையாடவில்லை. இப் போட்டியில் விளையாடாததால் மிரஸ்லவ் குளோஸ் ரொனால்டோவின் 15 கோல் சாதனையை சமன் செய்யும் அரிய வாய்ப்பைத்தவற விட்டார். அரையிறுதியில் பங்கேற்காத உருகுவேயின் சுவாரெஸ் இப் போட்டியில் விளையாடினார்.


போட்டி தொடங்கி 15வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஸ்வெய்ன்ஸ்டைகர் அடித்த பந்தை உருகுவே கோல்காப்பாளர் தட்டிவிட அப்பந்தைப் பெற்றுக் கொண்ட ஜெர்மனியின் முல்லர் அதையடித்து கோலாக்கினார். இக் கோல் அவருக்கு இப்போட்டித்தொடரின் 5வது கோலானது. 9 நிமிடங்கள் கழித்து உருகுவேயின் சுவாரெஸ் பாஸ் செய்த பந்தை கவானி அடித்து கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.





இடைவேளையின் பின் உருகுவேயின் போர்லான் 51வது நிமிடத்தில் கோலடித்தார். சரியாக 5 நிமிடங்கள் கழித்து ஜெர்மனியின் ஜன்சன் கோலொன்றைப் போட ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதன் பின் இரு அணி கோல்காப்பாளர்களும் எதிரணியின் கோல்களைத் தடுக்க பகீரதப் பிரயத்தனம் எடுத்தனர். 81வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கிடைத்த கோர்னரை ஊஸில் அடித்தார். இப்பந்து ப்ரெயிட்ரிக்கின் தலையில் பட்டு பின் லுகானோவின் தலையில் பட்டு இறுதியாக கெய்டிராவின் தலையில் பட்டு கோலானது.



போட்டியில் தோல்வியடைந்தாலும் பல வருடங்கள் கழித்து அரையிறுதி வந்ததன் மகிழ்ச்சியில் உருகுவே வீரர்களும் தொடர்ந்து 2வது முறையாக 3ம் இடத்தையே பெற்றுக் கொண்ட விரக்தியில் ஜெர்மனி வீரர்களும் நாடு திரும்பினர்.

Friday, July 9, 2010

வெல்லப் போவது யார் ?





உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதி நிலையை எட்டி விட்டன. வெல்லப் போவது ஸ்பெயினா? நெதர்லாந்தா? என்ற பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இரு அணிகளும் போட்டிக்குப் போட்டி தமது திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகின்றன.

இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க அணிகள் ஏதும் தகுதி பெறாத நிலையில் வேற்றுக் கண்ட அணியொன்று ஆப்பிரிக்க மண்ணில் சாதிப்பது உறுதியாகியுள்ளது.





வரலாறு

1974ம் 1978ம் ஆண்டுகளில் முதல் நிலை அணியாக விளங்கிய நெதர்லாந்து இரு முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும் ஜெர்மனி ஆர்ஜென்டீனா ஆகியவற்றிடம் பரிதாபகரமாகத் தோற்று வெளியேறியது. இந்த அவமானங்களுக்கெல்லாம் பழி தீர்த்துச் செல்லக் காத்திருக்கிறது.



மறுமுனையில் இதுவரை அரையிறுதிக்கே தெரிவாயிராத ஸ்பெயின் அணி இம்முறை அரையிறுதி வந்ததோடு இறுதிப்போட்டிக்கும் தெரிவாயுள்ளது. 2008ம் ஆண்டு ஐரோப்பியக் கிண்ணத்தை சுவீகரி்த்துள்ளமையால் அணி வீரர்கள் மிகுந்த மனோதிடத்துடன் காணப்படுகின்றனர்.


இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில்
நெதர்லாந்து ஸ்பெயின்
வெற்றி 4 3
டிரா 1 1
கோல்கள் 10 12


அணி வீரர்கள்

நெதர்லாந்து அணி வேகமாகத் தாக்கி அதிகளவு கோல்களைப் போடும் ஒரு அணியாகும். அவ்வணி சார்பாக வெஸ்லி ஸ்னைடர் 5 கோல்களைப் போட்டு முன்னிலை வகிக்கிறார். அவ்வணியின் ரொபர்ன் எதிரணித் தடுப்பாளர்களை ஏமாற்றி லாவகமாக பந்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லக் கூடியவர். அவரது அனுபவம் அவ்வணிக்குப் பக்கபலமாக அமையும். குயிட், வான் பெர்ஸி என்போரும் எதிர்பாராத தருணங்களில் கோலைப் போட்டு ஆட்டத்தின் போக்கையே மயற்றக் கூடியவர்கள். பொமல் எத்தகைய வீரர்களையும் தடுக்கக் கூடியவர். அணித்தலைவர் ப்ரொங்ஹேர்ஸ்ட் உருகுவேயுக்கு எதிராகப் போட்ட கோலை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் குழு –

· கோல் காப்பாளர் – ஸ்டெகலன்பேர்க்

· பின்களம் – ப்ரொங்ஹேர்ஸ்ட் மதிஜ்ஸென் ஹெயிட்டிங்கா

· மத்திய களம் – பொமல் டி ஜொங் டி வார்ட்

· முன்களம் – ரொபர்ன் ஸ்னைடர் வான் பேர்ஸி குயிட்





ஸ்பெயின் அணிக்கு சாதகமான விடயங்களில் ஒன்று அவ்வணிக் குழாமாகும். கஸில்லஸ் முதல் டொரஸ் வரை ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே உள்ளடக்கிக் காணப்படுகிறது. ஸ்பெயின் அணியின் தலைவரும் கோல்காப்பாளருமான இகர் கஸில்லஸ் இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த கோல் காப்பாளராவார். க்ஸாவி, இனியெஸ்டா ஆகியோர் முன்கள வீரர்களுக்கு கோலடிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் சிறப்பு மிக்கவர்கள். வில்லா 5 கோல்கள் அடித்து தங்கப் பாதணிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளார். ரேமொஸ் களத்தடுப்பில் அனுபவம் மிக்க வீரராக காணப்படுகிறார்.

விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் குழு –

· கோல் காப்பாளர் – இகர் கஸில்லஸ்

· பின்களம் – ரேமொஸ் கப்டிவில்லா புயொல்

· மத்திய களம் – க்ஸாவி இனியெஸ்டா அலோன்சோ

· முன்களம் – வில்லா டொரஸ் பெட்ரோ


Thursday, July 8, 2010

ஸ்பெயினிடம் மண்டியிட்டது ஜெர்மனி !!!

07.07.10 அன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இறுதிக்குத் தகுதி பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகள் மோதின. இப் போட்டியில் 1-0 என்ற கோல் அடிப்படையில் ஸ்பெயின் வெற்றியீட்டியது. இப் போட்டியில் ஜெர்மனியின் முல்லர் விளையாடவில்லை.


ஆரம்பம் தொடக்கம் இரு அணி வீரர்களும் எதிரணியினர் கோல் போடுவதை தடுத்துக் கொண்டே வர முதல்பாதி கோல்கள் ஏதுமின்றி நிறைவு பெற்றது. பிற்பாதியில் ஸ்பெயினின் அலோன்சோ, ஜெர்மனியின் ஊஸில் ஆகியோர் மயிரிழையில் கோல் வாய்ப்பைத் தவற விட்டனர். எனினும் ஸ்பெயின் அணி வீரரும் பார்சிலோனா கால்பந்தாட்டக் கழக அணித் தலைவருமான கார்லோஸ் புயோல் 73வது நிமிடத்தில் க்ஸாவி அடித்த கோர்னர் கிக்கை கோலாக மாற்றினார். தொடர்ந்து ஜெரமனியின் கோல் வாய்ப்புக்களைத் தடுத்துக் கொண்டே வந்த ஸ்பெயின் 1-0 என வெற்றி றெ்று இறுதிக்குள் நுழைந்தது. இப் போட்டியில் தங்கப் பாதணிக்குப் போட்டியிடும் வில்லா, குளோஸ் ஆகியோர் கோலடிக்காதது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.


இறுதிக்கு நுழைந்தது நெதர்லாந்து !!

06.07.10 நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 3-2 என தோற்கடித்த நெதர்லாந்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அப் ஆபாட்டியில் நெதர்லாந்து ஆரம்பம் தொடக்கமே ஆவேசமாக ஆடி வந்தது. அவ்வணியின் தலைவர் வான் ப்ரொங்ஹேர்ஸ்ட் 18வது நிமிடத்தில் கிட்டத்தட்ட 30 அடி தொலைவிலிருந்து கோலொன்றைப் போட்டு அசத்தினார். தொடர்ந்து வந்த உருகுவே அணித் தலைவர் டியாகோ போர்லான் 41வது நிமிடத்தில் 25 அடி தொலையிலிருந்து கோலைப் போட்டு தானும் சளைத்தவரல்ல என நிரூபித்தார். இக் கோல் இப் போட்டித் தொடரில் அவரது 4வது கோலாகும். இதனால் இரு அணிகளும் இடைவேளையின் போது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையிலிருந்தன.

பின்னர் நெதர்லாந்து சார்பாக வெஸ்லி ஸ்னைடர் 70வது நிமிடத்திலும், அர்ஜான் ரொபர்ன் 73வது நிமிடத்திலும் கோல்களைப் போட்டு அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச்சென்றனர். பிற்பாதியின் மேலதிக நிமிடங்களின் போது உருகுவே அணி வீரர் பெரெயிரா ஒரு கோலைப் போட, முடிவில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.


Saturday, July 3, 2010

அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள்- ஒரு அலசல்

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களை மட்டுமன்றி வீரர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. காலிறுதிப் போட்டிகள் முடிந்து உருகுவே, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன.

· கடந்த முறை அரையிறுதிக்குத் தெரிவான நாடுகளில் ஜெர்மனி மட்டுமே இம்முறையும் தெரிவாயுள்ளது.

· ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய அணிகள் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை.

· இம்முறை இடம்பெற்ற அணிகளுல் உருகுவேயைத் தவிர ஏனையவை ஐரோப்பிய நாடுகளாகும்.

· நெதர்லாந்து மட்டுமே இத் தொடரில் ஒரு போட்டி விடாமல் எல்லாவற்றையும் வென்று வந்துள்ளது.

· ஸ்பெயின், ஜெர்மனி என்பன லீக் போட்டிகளில் தலா ஒரு முறை தோற்றுள்ளன.

உருகுவே

விளையாடியவை – 5

வெற்றி – 4

டிரா – 1

தோல்வி – 0

கோல்கள் – 7

சிறந்த வெற்றி – 3-0 (எதிர் தென்னாபிரிக்கா)

கூடிய கோல்கள் – போர்லான் (3), சுவாரெஸ் (3)

ஏனைய சிறந்த வீரர்கள் – கோடின், பியுசில், கவானி




நெதர்லாந்து

விளையாடியவை – 5

வெற்றி – 5

டிரா – 0

தோல்வி – 0

கோல்கள் – 9

சிறந்த வெற்றி – 2-0 (எதிர் டென்மார்க்)

கூடிய கோல்கள் – வெஸ்லி ஸ்னைடர் (4)

ஏனைய சிறந்த வீரர்கள் – குயிட், ரொபர்ன், வான் பேர்ஸி, வான் ப்ரொங்ஹேர்ஸ்ட்




ஜெர்மனி

விளையாடியவை – 5

வெற்றி – 4

டிரா – 0

தோல்வி – 1

கோல்கள் – 13

சிறந்த வெற்றி – 4-0 (எதிர் ஆர்ஜென்டீனா, அவுஸ்திரேலியா)

கூடிய கோல்கள் – குளோஸ் (4), முல்லர் (4)

ஏனைய சிறந்த வீரர்கள் – ஊஸில், லாம், பொடல்ஸ்கி




ஸ்பெயின்

விளையாடியவை – 5

வெற்றி – 4

டிரா – 0

தோல்வி – 1

கோல்கள் – 6

சிறந்த வெற்றி – 2-0 (எதிர் ஹொன்டுரஸ்)

கூடிய கோல்கள் – வில்லா (5)

ஏனைய சிறந்த வீரர்கள் – கஸில்லஸ், டொரஸ், இனியெஸ்டா, ரேமொஸ், க்ஸாவி, அலோன்சோ


ஸ்பெயின், ஜெர்மனி இறுதிக்குள் !!

03.70.10 அன்று நடந்த காலிறுதிப் போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி என்பன அரையிறுதிக்கு இடம்பிடிக்க பரகுவேயும், ஆர்ஜென்டீனாவும் நாடு திரும்பின.

முதலாவதாக நடைபெற்ற ஆர்ஜென்டீனா - ஜெர்மனி போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆர்ஜென்டீனா 0-4 என அதிர்ச்சித் தோல்வியடைந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி சார்பாக முல்லர் 3வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். இது இவ்வுலகக் கோப்பை போட்டிகளின் அதி வேகமான கோலாக அமைந்ததோடு, ஜெர்மனி அணியின் 200வது உலகக் கோப்பை கோலாகவும் பதிவானது. பின்னர் 68வது நிமிடத்தில் குளோஸ~ம் 74வது நிமிடத்தில் ப்ரெயிட்ரிச்சும் 89வது நிமிடத்தில் குளோஸ் மீண்டுமொரு கோலையும் போட ஜெர்மனி 4-0 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றியீட்டியது.

பின்னதாக இடம்பெற்ற போட்டி முதலாவதைப் போல விறுவிறுப்பாக அமையாவிட்டாலும் ஸ்பெயின் அணி சாதுரியமாக விளையாடி வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக டேவிட் வில்லா 83வது நிமிடத்தில் கோல் போட்டு தொடரின் 5வது கோலைப் பதிவு செய்தார். ஸ்பெயின் கோல்காப்பாளரான கஸில்லஸ் சிறப்பாக செயலபட்டு கார்டோஸின் பெனால்டி உட்பட 4 கோல் வாய்ப்புக்களைத் தடுத்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.


வெளியேறின பிறேசில், கானா அணிகள் !!

02.07.10 நடந்த கால்பந்தாட்டப் போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சம் அற்றவையாக இருந்ததோடு அனேகருக்கு அதிர்ச்சி தருவனவாகவும் அமைந்தன. 1ம் நிலை அணியான பிறேசிலும், காலிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே ஆபிரிக்க நாடான கானாவும் வெளியேற, நெதர்லாந்து, உருகுவே என்பன அரையிறுதிக்கு முன்னேறின.

முதலாவதாக நடைபெற்ற பிறேசில்- நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து 2-1 என வெற்றியீட்டியது. போட்டியின் தொடக்கத்தில் பிறேசில் அணியே ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பிறேசிலின் ரொபின்ஹோ போட்ட கோல் ஓஃப் சைட் ஆனதால் நிராகரிக்கப்பட்டது. எனினும் சுதாரித்துக் கொண்ட அவர் 10வது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு பிறேசிலை முன்னிலையில் இருத்தினார். போட்டியின் 2வது பாதியில் கோலை சமப்படுத்த நெதர்லாந்து வீரர்கள் விடாது முயற்சித்தனர். அதன் பலனாக 53வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெஸ்லி ஸ்டெர் அடித்த ப்றீ கிக் பிறேசிலின் பிலிபே மெலோவின் தலையை உரசிச் சென்று சேம்சைட் கோலானது.


பின்னர் நெதர்லாந்தின் சரமாரியான தாக்குதலைக் கட்டுப் படுத்த முடியாத பிறேசில் வீரர்கள் முரட்டுத்தனமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். பிலிபே மெலோ ரொபர்னை விழுத்தியதோடு காலில் உதைத்ததால் சிவப்பட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின் நெதர்லாந்துக்குக் கிடைத்த கோர்னர் கிக்கை ஸ்னைடர் தலையால் தட்டி கோல் போட்டு நெதர்லாந்துக்கு வெற்றி தேடித் தந்தார். வாய்ப்புக்களைத் தவறவிட்ட பிறேசில் அணி தோற்று நாடு திரும்பியது

மற்றைய போட்டியான உருகுவே கானா போட்டியில் கானா வீரர் முன்டாரி 45வது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டார். அதை உருகுவேயின் போர்லான் 55வது நிமிடத்தில் கோல்போட்டு சமப்படுத்தினார். தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல்போட முயற்சித்தனர். போட்டி இறுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது கானாவின் அடியாஹ் கோலை நோக்கி அடித்த பந்தை உருகுவேயின் சுவாரெஸ் கையால் தடுக்க சிக்கல் எழுந்தது.

இதனால் சுவாரெஸ் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதோடு கானாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டியை கியான் உதைக்க அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. போட்டி முடிவுக்கு வராமையால் பெனால்டி முறை அமுல்படுத்தப் பட்டது. அம்முறையில் உருகுவே அணி 4-2 என கோலடித்து வெற்றி பெற்றது.


Thursday, July 1, 2010

நெதர்லாந்தை வெல்லுமா பிறேசில் ?

உலகக் கோப்பை போட்டிகளில் ரவுன்ட் ஓஃப் 16 முடிந்து காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாயுள்ளன. யார் வெல்லப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே முற்றிக் கொண்டே செல்கின்றது. அதற்கேற்றாற் போல போட்டிகளும் கடுமையாகின்றன. அவ்வாறான ஒரு போட்டிதான் இந்த பிறேசில் – நெதர்லாந்து !

தரவரிசையில் 1ம் இடத்தியிருக்கும் பிறேசில் நட்சத்திர வீரர்களான ரொபின்ஹோ, மெய்க்கான், காகா, லூயிஸ் பாபியானோ ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. வட கொரியாவுடன் 2-1, ஐவரி கோஸ்ட்டுடன் 3-1, சிலியுடன் 3-0 என வெற்றியீட்டியதோடு போர்த்துக்கலுடனான போட்டியை 0-0 என சமன் செய்துள்ளது. லூயிஸ் பாபியானோ 4 போட்டிகளில் விளையாடி 3 கோல்கள் போட்டுள்ளதால் அவர் இப் போட்டியில் கோல்களையடித்து தங்கப் பாதணிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

மறுமுனையில் 4ம் இடத்திலுள்ள நெதர்லாந்தில் பெரிய வீரர்கள் இல்லாவிடினும் வான் பேர்ஸி, வான் டி வார்ட், அர்ஜான் ரொபர்ன் போன்றோர் ஆறுதலளிக்கலாம். அதிலும் ரொபர்ன் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வருவது பிறேசில்அணிக்கு பெருந் தலையடியாக அமையலாம். இத்தொடரில் நெதர்லாந்து அனைத்துப் போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்து வருவதார் அணி வீரர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். (டென்மார்க்குடன் 2-0, ஜப்பானுடன் 1-0, கமரூனுடன் 2-1, ஸ்லோவாக்கியாவுடன் 2-1)

இதனால் இப் போட்டி இரு அணி வீரர்களுக்கும் வாழ்வா? சாவா? என்ற ரீதியில் அமைவதோடு ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைவது உறுதி !!