Sunday, August 29, 2010

ரேசி்ங்கை வீழ்த்தியது பார்சிலேனா!!

ஸ்பெயினின் லா லீகா போட்டிகள் நேற்று முதல் நாள் கோலாகலமாக தொடங்கின. நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் ரேசிங்கை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் பார்சிலோனா 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனாவின் லியனல் மெஸி 4வது நிமிடத்திலும், இனியெஸ்டா 33வது நிமிடத்திலும் கோல்போட்டனர். 35வது நிமிடத்தில் ரேசிங்கிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் அதை பெரேஸ் அடிக்க பார்கிலோனா கோல்காப்பாளர் வால்டஸ் இலகுவாக தடுத்தார். இறுதியாக டேவிட் விலா 62வது நிமிடத்தில் கோலடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றிபெற்றது.


நேற்றும், முதல் நாளும் நடைபெற்ற ஏனைய போட்டிகள்-

அத்லெட்டிக் பில்பாவோ 1 - 0 ஹெர்குலஸ்
வாலன்சியா 3 - 1 மலகா
செவில்லா 4 - 1 லெவான்டே
ரியல் சோஸிடட் 1 - 0 வில்லாரியல்
ஒஸாசுனா 0 - 0 அல்மேரியா
எஸ்பானியோல் 3 - 1 கெடாபேஃ
டிபோர்டிவோ 0 - 0 ஸரகோஸா
பார்சிலோனா 3 - 0 ரேசிங்
ரியல் மாட்ரிட் 0 - 0 மல்லோர்கா
4.5

மொன்சென்க்லாட்பாச் கோல் மழை !!!

பண்டஸ்லீகாவில் நேற்று நடந்த போட்டிகளில் மொன்சென்க்லாட்பாச் அணி லிவர்குஸன் அணியை 6-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 26வது போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்தமைக்கு முடிவு கட்டியது. மொன்சென்க்லாட்பாச்சின் ஹெர்மன் 20வது நிமிடத்திலும், லிவர்குஸனின் டெர்டியோக் 24வது நிமிடத்திலும் கோல்போட கோல்நிலை சமனானது. பின் மொன்சென்க்லாட்பாச்சின் ப்ரூவர்ஸ், ஹெர்மான், அராங்கோ வரிசையாக கோல்போட அவ்வணி 4-1 என முன்னிலை பெற்றது. 58வது நிமிடத்தில் லிவர்குஸனின் வெடால் பெனால்டி கோல் போட்டார்

பின் மொன்சென்க்லாட்பாச்சின் இட்ரிஸ்ஸோவும், ரியசும் கோல் போட்டு 6-2 என கோல் நிலையை உயர்த்தினர். இறுதியாக லிவர்குஸனின் கியப்லிங் ஆறுதல் கோல் போட எதிரணி வெற்றிபெற்றது. நேற்று நடந்த மற்றுமொரு போட்டியில் டோர்ட்மன்ட், ஸ்டக்கார்ட்டை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

ப்ரீமியர் லீக்- 2வது வாரம்

ப்ரீமியர் லீகில் 2வது வாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று லிவர்பூல் அணி இந்த சீசனில் தனது முதலாவது வெற்றியை வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்கு எதிராக பதித்தது. இப்போட்டியில் லிவர்பூலிலருந்து விலகிய ஜேவியர் மஸிரானோவுக்குப் பதிலாக புதுமுக வீரர் கிறிஸ்டியன் பவுல்சன் விளையாடினார். இதன்போது இவ்வணியின் பெர்னான்டோ டொரஸ் 65வது நிமிடத்தில் கோலடித்தார். 84வது நிமிடத்தில் வெஸ்ட் ப்ரோம்விச் அணியின் ஜேம்ஸ் மொரிஸன் சிவப்பட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இறுதியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.


நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

பொல்டன் 2 - 2 பர்மிங்ஹம்
சன்டர்லான்ட் 1 - 0 மான்செஸ்டர் சிட்டி
ஆஸ்டன் விலா 1 - 0 எவர்ட்டன்

Saturday, August 28, 2010

ஸ்லடான் போனார், மஸிரானோ வந்தார்!!

பார்சிலோனா அணியில் பல மாற்றங்கள் நேற்று ஏற்பட்டன. முதலாவதாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தையிலிருந்த ஸ்லடான் விவகாரம் முடிவுக்கு வந்தது. ஸ்லடான் இப்ராஹிமூவிக் நேற்று ஏ.சி மிலானுக்கு 24 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டார். (ஆனால் சென்ற வருடம் பார்சிலோனா இவரை வாங்கும் போது இன்டரிடமிருந்து 66 மில்லியன் யூரோவுக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.) ஸ்லடான் ஏ.சி மிலான் அணியில் 4 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

அதேவேளை லிவர்பூலின் ஜேவியர் மஸிரானோ பார்சிலோனா அணியால் 21 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனல் மெஸி, "மஸிரானோ இங்கு வருவது குறித்து எனக்கு மிக மகிழ்ச்சி. மஸிரானோ ஒரு சிறந்த மத்தியகள வீரர். சக நாட்டவருடன் சேர்ந்து விளையாடும் அனுபவம் எப்போதும் அருமையாகவே இருக்கும்." என கூறினார்

வுல்வ்ஸ்பேர்க் மீண்டும் தோல்வி !!

2008 பன்டஸ்லீகாவின் சாம்பியன் வி.எஃப்.எல் வுல்வ்ஸ்பேர்க் அணி இம்முறை தடுமாறி வருகிறது. முதல்போட்டியில் பேயர்னிடம் தோற்ற இவ்வணி நேற்று நடைபெற்ற போட்டியில் மெயின்ஸ் அணியிடம் 4-3 என்ற கோலடிப்படையில் பரிதாபமாகத் தோற்றது. அவ்வணியின் ட்ஸெகோ 24ம், 27ம் நிமிடங்களில் இரட்டைக் கோலடித்ததோடு, டியேகோ 30வது நிமிடத்தில் கோலடிக்க சடுதியாக 3-0 என அபார முன்னிலை பெற்றது. ஆனால் அதன்பின் ஆட்டம் மெயின்ஸ் கைவசமானது. முதற்பாதியின் போது மெயின்ஸின் டுங்கன் 40வது நிமிடத்தில் கோலடித்தார்.

அதன்பின் எல்கின் சோட்டோ 48வது நிமிடத்திலும், ஆன்ட்ரே சூர்லே 58வது நிமிடத்திலும் கோலடிக்க கோல் எண்ணிக்கை சமநிலைக்கு வந்தது. கடைசி நேரத்தில் போட்டியை தங்கள் பக்கம் ஈர்க்க வுல்வ்ஸ்பேர்க் அணியினர் கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர். எனினும் போட்டி முடிய 3 நிமிடங்கள் மட்டுமே இருக்கையில் மெயின்ஸின் அடம் ஸலாய் அற்புதமாக கோல் போட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

வெர்டர் பிரமன் 4 - 2 கொல்ன்
ஹன்னோவர் 2 - 1 ஷால்கே
ஹாம்பர்க் 3 - 1 ப்ராங்பர்ட்
ப்ரெய்பேர்க் 2 - 1 நியர்ன்பேர்க்
ஹொவன்ஹெய்ம் 1 - 0 சென்ட் பாலி

மான்செஸ்டர் யுனைட்டட், ஆர்சனல், செல்சீ வெற்றி !!!

இங்கிலிஷ் பிரீமியர் லீகில் நேற்று நடந்த போட்டிகளில் முக்கிய கழக அணிகளான மான்செஸ்டர் யுனைட்டட், ஆர்சனல், செல்சீ என்பன வெற்றியீட்டியுள்ளன. முதலாவதாக நடந்த ஆர்சனல்-பிளாக்பர்ன் போட்டியில் ஆர்சனலின் தியோ வால்காட் 19வது நிமிடத்திலும், பிளாக்பர்னின் டியஃப் 26வது நிமிடத்திலும் கோல்களையடித்து கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினர். எனினும் ஆர்சனலின் அர்ஷாவின் 51வது நிமிடத்தில் கோலடிக்க அவ்வணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.


பின்பு நடந்த செல்சீ ஸ்டோக் சிட்டி போட்டியில் செல்சீயின் புளோரன்ட் மலூடா 31வது நிமிடத்தில் கோலடித்தார். பின்பு 76வது நிமிடத்தில் அதே அணியின் டிடியர் டிரொக்பா பெனால்டி மூலம் கோலடிக்க செல்சீ 2-0 என வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடரின் 3வது வாரம் தொடங்கியும் இன்னும் செல்சீக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கற்போதைய அளவில் அதிக கோலடித்தோர் பட்டியலில் ஆர்சனலின் வால்கட்டும், செல்சீயின் மலூடாவும் தலா 4 கோலடித்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 2வது இடத்தில் செல்சீயின் டிரொக்பா 3 கோலும், 1 பெனால்டி கோலும் அடித்துள்ளார்.


இதேவேளை மான்செஸ்டர் யுனைட்டட், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் மான்செஸ்டர் யுனைட்டட் 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. அவ்வணியின் வேயளன் ரூனி 33வது நிமிடத்தில் பெனால்டி கோலடித்தும்(வெஸ்ட் ஹாமின் ஸ்பெக்டர் செய்த ஃபவுலால் பெறப்பட்டது), நானி, பெர்படோவ் ஆகியோர் முறையே 49வது, 68வது நிமிடங்களில் கோலடித்தும் அவ்வணியின் வெற்றிக்கு உதவினர்.

நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

வீகான் அத்லெட்டிக் 1 - 0 டொட்டன்ஹாம்
வுல்வ்ஸ் 1 - 1 நியுகாஸ்டல்
பிளாக்பூல் 2 - 2 வுல்ஹாம்

பயார்னை வீழ்த்தியது கைசர்ஸ்லாட்டர்ன் !!!

பன்டஸ்லீகா போட்டிகளில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பயார்ன் மியூனிச்சை கைசர்ஸ்லாட்டர்ன் தனது மைதானத்தில் வைத்து 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 24வது நிமிடத்தில் மியூனிச்சின் ஸ்வைன்ஸ்டைகர் பாஸ் செய்த பந்தை பெற்றுக் கெண்ட தோமஸ் முல்லர் கோல்வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். 36வது நிமிடத்தில் கைசர்ஸலாட்டர்னின் இவோ இலிசெவிக் பெனால்டி கோட்டிலிருந்த வண்ணம் கோல் வலையின் மேல் மூலைக்கு அடித்து எதிணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


மறுநிமிடமே அதே அணியின் லகிக் கோலடிக்க இடைவேளையின் போது கைசர்ஸ்லாட்டர்ன் 2-0 எனும் கோல்கணக்கில் முன்னிலை எடுத்தது. இரண்டாவது பாதியில் பயார்ன் கோலடிக்க வேண்டும் எனும் நெருக்கடியில் வேகமாக வியைாடியதால் பல அற்புதமான கோல் வாண்ப்புக்களைத் தவற விட்டது. 87வது நிமிடத்தில் கைசர்ஸ்லாட்டர்னின் பதில் வீரர் ஹொபர் அடிக்கவிருந்த கோலை பயார்னின் தடுப்பாளர் மார்க் வாக் பொமல் அபாரமாக தடுத்து நிறுத்தினார். இவ்வெற்றியினால் பன்டஸ்லீகா தரவரிசையில் கைசர்ஸ்லாட்டர்ன் முதல் இடத்தை பெற்றுள்ளதோடு பயார்ன் மியூனிச் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சூப்பர் கப்- அத்லட்டிகோ மாட்ரிட் சாம்பியன் !!!

ஐரோப்பிய சூப்பர் கப் இறுதிப்போட்டியில் இத்தாலி லீக் நடப்புச் சாம்பியன் இன்டர் மிலானை எதிர்த்து விளையாடி அத்லட்டிக்கோ மாட்ரிட் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது. இது அத்லட்டிக்கோ மாட்ரிட் 1996க்குப் பிறகு 14 வருடங்கள் கழித்து பெறும் முதலாவது கோப்பையாகும். போட்டியின் முதற்பாதியில் அத்லட்டிக்கோவின் செர்ஜியோ அகுவாரோ கோல்போட இரண்டு முயற்சிகளை எடுத்திருந்தும் பயனளிக்கவில்லலை. முதலாவது பக்க வலையில் பட்டதோடு, இரண்டாவது கோல் வலைக்கு அப்பாலும் சென்றது.


29வது நிமிடத்தில் இன்டரின் ஸ்னைடர் அடித்த கோர்னரை வால்டர் சாமுவேல் தலையால் முட்ட அது கோல் கம்பத்துக்கு மேலாகச் சென்றது. மூன்று நிமிடங்கள் கழித்து அவ்வணியின் சாமுவேல் ஈட்டூவுக்கு கோலடிக்க கிடைத்த வாய்ப்பும் பரிதாபகரமாக தவறிச் சென்றது. இதனால் முதற்பாதி ஆட்டம் கோல் இல்லாமலேயே நிறைவுற்றது. அத்லட்டிக்கோ மாட்ரிட் வீரர்கள் ஜோஸ் ரெயஸ் 69வது நிமிடத்திலும் குன் அகுவேரோ 83வது நிமிடத்திலும் கோலடித்து அவ்வணிக்கு கிண்ணத்தை வென்று கொடுத்தனர்.

Thursday, August 26, 2010

லா லீகா 2010- வெல்லப்போவது யார்? பாகம் 2

லா லீகாவை பார்சிலோனா வெல்ல எந்த அளவு வாய்ப்பிருக்கோ அதேயளவு வாய்ப்பு ரியல் மாட்ரிட்டுக்கும் இருக்கு. சென்ற வருடம் கோப்பையை வெறும் 1 புள்ளியால் தவற விட்டவர்கள். இந்த வருடம் நாங்கள் தான் ஜெயிப்போம் என அந்த அணி வீரர் செர்ஜியோ ரேமொஸ் வேறு உறுதியாக கூறியிருக்கிறார். எனவே அவ்வணி ஜெயிக்க பக்க பலமாக இருக்கக் கூடிய காரணிகளை ஆராய்வோம்.

1. ஜோஸ் மோரின்ஹோ
அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் தான் இவர். 2004ல் செல்சீக்கு பயிற்றுவிப்பாளர் பதவியை இவர் ஏற்றவுடன் அவ்வணி எதிர்பாராதவிதமாக மான்செஸ்டர் யுனைட்டட்டையும் தாண்டி பட்டம் வென்றது. சென்ற வருடம் இவர் இன்டர் மிலானுக்கு பயிற்றுவிப்பாளரானவுடன் அவ்வணி பட்டம் ஜெயித்தது. உலகின் சிறந்த கால்பந்நது பயிற்றுவிப்பாளர்களுல் ஒருவராக கருதப்படும் இவர் அணிக்கு இம்முறை பலமாற்றங்களை கொண்டுவந்துள்ளார். இவர் மீதான எதிர்பார்ப்பு ரியல் மாட்ரிட் கோப்பையை வெல்ல நிச்சயம் காரணமாயிருக்கும்.


2. இளம் வீரர்கள்
ரியல் மாட்ரிட் இந்த சீசனுக்காக ஒப்பந்தம் செய்துள்ள 6 வீரர்களில் 5 பேர் 23 அல்லது அதற்கும் குறைந்த வயதுடையோர் (கனாலஸ், ஊஸில், டிமாரியா, கெடிரா லியோன்). இவர்கள் தவிர ஏற்கெனவே உள்ள வீரர்களில் 11 பேர் 25 அல்லது அதற்கும் குறைந்த வயதுடையோர். இவ் இளம் வீரர்களின் துடிதுடிப்பும், அலோன்சோ, கஸில்லஸ், பீபே, காகா, கார்வாலோ போன்ற வீரர்களின் அனுபவமும் கை கொடுத்தால் ரியல் மாட்ரிட் மீண்டும் ஒருமுறை சாம்பியனாகலாம்.


3. கிறிஸ்டியானோ ரொனால்டோ
25 வயதே உடைய இப் போர்த்துக்கல் வீரர் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளார். 2008ம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த இவர் கடந்த சீசனில் ரியல் மாட்ரிட்டுக்காக 35 போட்டிகளில் விளையாடி 33 கோல்களைப் போட்டிருந்தார். இவரது அபாரமான பந்து நகர்த்தல்களும், ப்றீ கிக் அடிக்கும் நேர்த்தியும் இவரை ஐரோப்பாவின் சிறந்த முன்கள வீரர்களுல் ஒருவராக இனங்காணப்பட வைத்துள்ளது. இவரது திறமை மங்கி வருவதாக எழும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுக்கலாம்.


4. சிறந்த தடுப்பாட்டம்
பார்சிலோனா அணியின் தடுப்பாட்டத்திற்கு இணையாக சிறந்த தடுப்பாட்டம் இவர்களிடமும் உள்ளது. உலகின் மிகச்சிறந்த கோல் காப்பாளரும், இந்த வருட உலகக் கோப்பையின் தஙகக் கையுறை வெற்றியாளருமான இகர் கஸில்லஸ் இவ்வணியில் இருப்பது பலம். இது தவிர ஸ்பெயின் அணி தடுப்பாட்டத்தின் ஹீரோ எனக் கருதப்படும் செர்ஜியோ ரேமெஸ் உம் இவ்வணியில் இருக்கிறார். இது தவிர கார்வாலோ , மார்சிலோ ஆகியோர் இருப்தால் தடுப்பு வரிசை பலம் பொருந்தியே காணப்படுகிறது.


5. பார்சிலோனாவின் சுழற்சி
இது ஒரு வகையில் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட காரணி. பார்சிலோனா 1991-94 காலகட்டத்தை தவிர எப்போதும் தொடர்ச்சியாக 3 தடவைகள் கோப்பையை ஜெயித்ததில்லை. 2005,2006 ஜெயித்தபின் 2007 ரியல் மாட்ரிட்டிடம் தோற்றது. இப்பொழுது 2008,2009 தொடர்ச்சியாக ஜெயித்துள்ளது. ரியல் மாட்ரிட்டுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குமானால் இம்முறையும் பார்சிலோனா கோப்பையை தவறவிடலாம்.


நன்றி- கோல்.காம்

Wednesday, August 25, 2010

ஏ.சி மிலான் செல்வாரா இப்ராஹிமூவிக்?

பார்சிலோனா அணியின் ஸ்ட்ரைக்கர் ஸ்லடான் இப்ராஹிமூவிக் இத்தாலியின் ஏ.சி மிலான் அணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதென செய்திகள் கூறுகின்றன. ஏற்கெனவே ஸ்லடானை எடுக்க ஏ.சி மிலான் முயற்சிகள் பல எடுத்திருந்தது. ஸ்லடான் இதுவரை அஜாக்ஸ், ஜ்வென்டஸ், இன்டர் மிலான், பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி மொத்தம் 7 கோப்பைகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது குறித்து கருத்து தெரிவித்த இப்ராஹிமூவிக்,
"நானும் பார்சிலோனா பயிற்றுவிப்பாளர் குவார்டிலோவும் 6 மதங்களாக பேசிக் கொண்டதே இல்லை. இதற்கான காரணம் எனக்கே தெரியவில்லை. நான் மாற்றப்படாத வரைக்கும் பார்சிலோனா வீரராகவே விளையாடுவேன். ஆனால் எனக்கு மிலானின் ரொனால்டீனோ போன்ற பெரிய வீரர்களோடு விளையாட விருப்பம்." என கூறினார்.

ஏ.சி மிலான் பயிற்றுவிப்பாளர் மஸிமிலியானோ அலெக்ரி ஸ்லடான் வருவது தனக்கு மகிழ்ச்சியளிக்கும் என தெரிவித்திருந்தார். பார்சிலோனா தலைவர் சான்டரோ ரொசல், மிலான் உபதலைவர் அட்றியோ கலியாணி மற்றும் ஸ்லடானின் செயலாளர் மினோ ரயோலா ஆகியோர் இன்று சந்தித்து ஸ்லடானின் ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடுவர்.

லா லீகா 2010- வெல்லப்போவது யார்? பாகம்-1

ஸ்பெயின் லீக் போட்டியான லா லீகா ஆரம்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வெல்லப் போவது யார் எனும் ஆவல் ரசிகர்களுக்கிடையே அதிகரித்துள்ளது. அவற்றில் அதிகளவு எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கும் அணிகள் நடப்பு சாம்பியன் பார்சிலோனாவும், அதன் விரோதி அணியான ரியல் மாட்ரிட்டுமேயாகும். இவ்வணிகளின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கக் கூடிய காரணிகளை அலசிப் பார்ப்போம்.

பார்சிலோனா

1. டேவிட் வில்லா
இவ்வாண்டு சீசனில் டேவிட் வில்லாவின் வருகையானது பார்சிலோனா அணியின் பலத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. இவர் ஏற்கெனவே லா லீகா அணிகளான வலன்சியா, ரியல் ஸரகாகா அணிகளுக்கு விளையாடியிருப்பதால் இக் கோப்பையின் முக்கியத்துவம் அறிந்தே விளையாடுவார். மேலும் இவ்வாண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதாலும், பார்சிலோனா அணிகளின் முன்னாள் சிறப்பாட்டக்காரர்களான ஹென்றி, அலெக்ஸான்டர் ஹெல்ப் ஆகியோர் விளையாடிய இடது முன்கள வீரராக விளையாடுவதாலும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


2. சிறந்த தடுப்பாட்டம்
பார்சிலோனா கோல்காப்பாளரான விக்டர் வால்டஸ் 2009ம் ஆண்டு ஸமாரா கோப்பையில் வெறும் 24 கோல்களை மட்டுமே தவற விட்டு அக் கோப்பையின் சிறந்த கோல் காப்பாளராக இருந்தார். இது தவிர கார்லஸ் புயோல், ஜெரார்ட் பிக் போன்ற தடுப்பாடக்காரர்களும் சிறப்பாக விளையாடி வருவது அவ்வணியின் தடுப்பு வரிசைக்கு பலம் சேர்த்துள்ளது.


3. ஸ்பெயின் வரிசை
பார்சிலோனா அணி வேறெந்த லா லீகா அணியிலும் பார்க்க அதிகளவு ஸ்பெயின் வீரர்களைக் கொண்டுள்ளது. வால்டஸ், பிக், புயோல், க்ஸாவி, இனியெஸ்டா, வில்லா, பெட்ரோ ஆகியோர் ஸ்பெயின் வீரர்களாவர். ஸ்பெயின் அணி இம்முறை உலகக் கோப்பையை வெற்றி கொண்டபோது இருந்த பல அணி வீரர்கள் பார்சிலோனா அணியிலும் அடங்குவர். இதனால் பார்சிலோனா மீதான எதிர்பார்ப்பு இன்னும் ஒரு படி அதிகரித்துள்ளது.


4. முக்கோண தாக்குதல்
பார்சிலோனா அணி சென்ற சீசனில் எதிரணி தடுப்பாட்ட வியூகத்தை தகர்த்து சரமாரியாக கோல்களைப் போட வழிவகுத்தது அவ்வணியின் முக்கோணம் எனக் கருதப்படும் மெஸி-இனியெஸ்டா-க்ஸாவி ஆகியோரின் கூட்டணியாகும். க்ஸாவி தன்னைத் தாண்டி எதிரணியினர் பந்தை நகர்த்திச் செல்லாதவாறு தடுத்துக்கொண்டே முன்னேறுவார். இனியெஸ்டா எதிரணி தடுப்பாட்டக்காரர்கள் தன்னை சூழ்ந்து கொள்ளும் வரை பந்தை விரட்டிச் சென்று சடுதியாக மெஸிக்கு பாஸ் செய்வார். தடுப்பு பலவீனத்தை சாதகமாக்கிக் கொண்டு மெஸி லாவகமாக கோல்போடுவார். இவ்வாறான தாக்குதல்கள் இந்த சீசனும் தொடரும் பட்சத்தில் கோப்பை பார்சிலோனாவுக்குத்தான்.


5. பயிற்றுவிப்பார்களின் மோதல்
பார்சிலோனா பயிற்றுவிப்பாளர் பெப் குவார்டிலோ சாதரணமாக பயிற்சியளித்தாலே கோப்பையை தூக்கி வந்து விடுவார்கள். இம்முறை ரியல் மாட்ரிட் பயிற்றுவிப்பாளராக ஜோஸ் மோரின்ஹோ பதவியேற்றபின் அவரது வியூகத்தை தாண்டி இவர், இவரது வியூகத்தை தாண்டி அவர் என மாறி மாறி பயிற்றுவிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள். போட்டி இருந்தால் தானே திறமையின் உச்சம் வெளிப்படும். ஆகவே குவார்டிலோவும் தன்னால் இயன்றளவு வீரர்களை மெருகேற்றித் தான் அனுப்புவார்.


நன்றி - கோல்.காம்

Monday, August 23, 2010

லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி !!

இங்கிலிஷ் பிரீமியர் லீகின் நேற்று நடைபெற்ற போட்டியில் லிவர்பூலை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலில் சிட்டியின் அடம் ஜொன்சன் 25 அடி தூரத்திலிருந்து அடித்த பந்து கோல் வலையை அண்மித்துச் சென்றது. 12வது நிமிடத்தில் அவர் பந்தை மில்னருக்கு பாஸ் செய்ய, மில்னரிடமிருந்து பந்தைப் பெற்று கரெத் பரி கோல் போட்டார். இதனால் மான்செஸ்டர் சிட்டி முன்னிலை வகித்தது. இந்த முன்னிலையைத் தகர்க்க லிவர்பூலின் டேவிட் நொக், ஸ்டீவன் ஜெரார்ட் ஆகியோர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காது போயின.

இடைவேளைக்கு பின் 52வது நிமிடத்தில் அடம் ஜொன்சன் தூரத்திலிருந்து அடித்த பந்தை மைக்கல் ரிச்சார்ட்ஸ் தலையால் தட்ட அதைப் பெற்றுக்கொண்ட மான்செஸ்டர் சிட்டியின் கார்லஸ் டெவேஸ் கோல் போட்டார். 67வது நிமிடத்தில் லிவர்பூலின் ஸ்கர்டல், மன்செஸ்டர் சிட்டியின் ஜொன்சனை பெனால்டி வலயத்தில் வைத்து foul செய்ததால் அவர் மஞ்சளட்டை காட்டப்பட்டதோடு, சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பும் வழங்கப்பட்டது. பெனால்டியை ஏற்றுக்கொண்ட டெவேஸ் கோல் போட மான்செஸ்டர் சிட்டி 3-0 என வெற்றி பெற்றது.

2வது வாரம் முடிந்துள்ள நிலையில் முதல் 5 இடங்களைப் பிடித்த பிரீமியர் லீக் அணிகள் -
1. செல்சீ
2. ஆர்சனல்
3. மான்செஸ்டர் யுனைட்டட்
4. மான்செஸ்டர் சிட்டி
5. பொல்டன்

Sunday, August 22, 2010

நியுகாஸ்டல் வெற்றி !! மான்செஸ்டர் யுனைட்டட் டிரா !!

ஆஸ்டன் விலாவுடனான முதல் போட்டியில் 6-0 என நியுகாஸ்டல் யுனைட்டட் வெற்றியீட்டியுள்ளது. இப் போட்டியின் 10வது நிமிடத்தில் ஆஸ்டனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதை காரியு அடித்தபோது அப்பந்து கோல்வலைக்கு மேலாக சென்றது. 12வது நிமிடத்தில் நியுகாஸ்டல் மத்தியகள வீரர் பார்டன் 25 அடி தூரத்திலிருந்து கனகச்சிதமாக குறிபார்த்து கோல்போட்டார். 31வது நிமிடத்தில் நியுகாஸ்டலின் கரல், நோலனுக்கு பாஸ் செய்ய நோலன் அவ்வணியின் 2வது கோலைப் போட்டார். அடுத்த 3வது நிமிடத்தில் ஆன்டி கரல் கோல் போட இடைவேளைக்குள் நியுகாஸ்டலின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.

67வது நிமிடத்தில் பார்டன் அடித்த கோர்னரை வில்லியம்சன் கரலுக்கு பாஸ் செய்ய அவர் தனது 2வது கோலை 15 அடி தூரத்திலிருந்து போட்டார். 20 நிமிடங்கள் கழித்து நோலன் நியுகாஸ்டலின் 5வது கோலை கோல்கம்பத்துக்கு அருகிலிருந்தவாறே சாமர்த்தியமாக போட்டார். இது போதாதென்று 90வது நிமிடத்தில் ஆன்டி கரல் கோல் போட்டு தனது ஹாட்ரிக்கை பதிவு செய்தார். இது இந்த பிரீமியர் லீக் சீசனின் 3வது ஹாட்ரிக்காகும்.



இரன்டாவதாக நடந்த மான்செஸ்டர் யுனைட்டட் - வுல்ஹாம் போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது. போட்டி தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைட்டடின் போல் சோலஸ் 25வது அடி தூரத்திலிருந்து குறி பார்த்து கோல் வலையின் இடது கீழ்மூலைக்கு அடித்து கோல் போட்டார். இது அவர் மான்செஸ்டர் யுனைட்டட் அணி சார்பாக அடிக்கும் 150வது கோலாகும். இடைவேளையின் பின் வுல்ஹாம் அணியினர் புது உத்வேகத்துடன் விளையாடத் தொடங்கினர். 57வது நிமிடத்தில் அவ்வணியின் சமோரா பின்னால் பாஸ் செய்த பந்தை சைமன் டேவிஸ் விரட்டிச் சென்று கோல்போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

84வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைட்டட்டிற்கு கிடைத்த கோர்னர் கிக்கை கிக்ஸ் அடிக்க பந்து போய் வுல்ஹாம் அணியின் ஹங்கலான்டின் முழங்காலில் பட்டு கோல் வலையுள் புகுந்து சேம்-சைட் கோலானது. மான்செஸ்டர் யுனைட்டட் பெற்ற 2-1 முன்னிலையை வைத்து வெற்றி பெற முயற்சித்துக் கொண்டிருக்கையில், 89வது நிமிடத்தில் ஹங்கலான்ட் தான் விட்ட பிழைக்கு பிரதியுபகாரமாக கோர்னர் கிக்கை தலையால் முட்டி கோல்போட்டார். இதனால் இறுதி தறுவாயில் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டது வுல்ஹாம்.

பன்டஸ்லீகா - 1வது வாரம்

நேற்றுடன் பன்டஸ்லீகாவின் 1வது வார போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆரம்ப போட்டியை தவிர ஆனைய போட்டிகளின் ஸ்கோர் விபரங்கள் இதோ -

ஹாம்பர்க் 2 - 1 ஷால்கே

சென்ட் பாலி 3 - 1 ப்ரெயிபேர்க்

மெயின்ஸ் 2 - 0 ஸ்டட்கார்ட்

லிவர்குஸன் 2 - 0 டோர்ட்மன்ட்

ஹொவன்ஹெய்ம் 4 - 1 வெர்டர் பிரெமன்

மக்லாட்பாச் 1 - 1 நியர்ன்பர்க்

ஹன்னோவர் 2 - 1 எயின்ட்ராச்ட்

கைசர்ஸ்லாடர்ன் 3 - 1 ப்ராங்பர்ட்கோல்ன்


முதலாவது வாரத்தின் நிறைவில் 1899 ஹொவன்ஹெய்ம் முதலிடத்திலுள்ளது. 2வது இடத்தில் சென்ட் பாலியும், 3வது இடத்தில் கைசர்ஸ்லாட்டர்னும், 4வது, 5வது இடங்களில் முறையே மெயின்ஸ், லிவர்குஸன் ஆகிய அணிகளும் உள்ளன. நடப்பு சம்பியன் பயர்ன் மியுனிச் 8வது இடத்தில் உள்ளது.

Saturday, August 21, 2010

இத்தாலியன் சூப்பர் கப் சாம்பியனானது இன்டர் !!!

இத்தாலியன் சூப்பர் கப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரோமா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5வது முறையாகவும் இன்டர் மிலான் சாம்பியனானது. இவ் வெற்றியின் மூலம் இத்தாலிய சூப்பர் கப் வரலாற்றில் அதிக முறை கோப்பையை ஜெயித்தோர் பட்டியலில் தமது எதிரி அணியான ஏ.சி மிலான் அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறது. 20வது நிமிடத்தில் ரோமாவின் ஜோன் ஆர்ன் ரைஸ் லாவகமாக பந்தை கோல்வலையின் கீழ் மூலைக்குச் செலுத்தி ரோமா அணியை முன்னிலை பெறச் செய்தார்.


இந்த முன்னிலையை தவறவிடக்கூடாது என்ற திடத்துடனேயே ரோமா அணியினர் விளையாடினாலும் இன்டர் மிலானின் கோரன் பன்தேவ் களத்தடுப்புப் பிழைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோல் போட்டார்.இதனால் இடைவேளையின் போது இரு அணிகளும் 1-1 என சமநிலையிலிருந்தன. எனினும் கமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இன்டரின் சாமுவேல் ஈட்டூ ரோமா கோல் காப்பாளர் பொக்டன் லோபொன்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் 70வது, 80வது நிமிடங்களில் கோல் போட்டு இன்டர்மிலானின் வெற்றியை உறுதி செய்தார்.

மெஸி ஹாட்ரிக்கில் வீழ்ந்தது செவிலா !!!

ஸ்பானிஷ் சூப்பர் கப் போட்டிகளில் பார்சிலோனா, செவிலா அணிகளுக்கிடையான 2ம் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா செவிலா அணியை 4-0 என வென்று ஸ்பானிஷ் சூப்பர்கப் சாம்பியனானது. ஏற்கெனவே நடந்த 1ம் லெக் ஆட்டத்தில் செவிலா 3-1 என ஜெயித்தது. இப் போட்டியில் 14வது நிமடத்தில் பார்சிலோனாவின் பெட்ரோ 2 தடுப்பாளர்களைத் தாண்டி கோல் வலையினுள் பந்தை அடிக்க முயலும் போது அது செவிலாவின் காங்கோவின் காலில் பட்டு சேம் சைட் கோலானது. 25வது நிமிடத்தில் பார்சிலோனாவின் க்ஸாவி 20அடி தூரத்திலிருந்து பாஸ் செய்த பந்தைப் பெற்று லியோனல் மெஸி கோலடித்தார். க்ஸாவியின் சிறப்பான, நுணுக்கமான ஆட்டத்தால் செவிலா வீரர்கள் பார்சிலோனாவின் வியூகத்தை உடைத்து உள்ளே வர எவ்வளவோ முயற்சித்த போதும் அது முடியாமல் போனது.

43வது நிமிடத்தில் மெஸி 2வது கோலடிக்க இடைவேளையின் போது பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 89வது நிமிடத்தில் பார்சிலோனாவின் டானியல் ஆல்வ்ஸ் செவிலா தடுப்பாளர்களைத் தாண்டி வந்து மெஸிக்கு பாஸ் செய்தார். இப் பந்தைப் பெற்ற மெஸி ஹாட்ரிக் கோலடித்தார். போராட்டமும் முயற்சியும் பலனளிக்காது போக செவிலா பார்சிலோனாவிடம் 4-0 என தோற்றனர்.

ஆர்சனல் அதிரடி வெற்றி !!!

முதல் போட்டியில் லிவர்பூலுடன் தட்டுத்தடுமாறி டிரா செய்த ஆர்சனல், புதுமுக அணியான பிளாக்பூலுடனான இரன்டாவது போட்டியை 6-0 என வெற்றியீட்டியது. 12வது நிமிடத்தில் இங்கிலாந்தின் சிறந்த இளம் வீரர் எனக் கருதப்படும் தியோ வால்காட் கோலடித்தார். 31வது நிமடத்தில் ஆர்சனலின் சமக்கை பெனால்டி எல்லையில் வைத்து முரட்டுத்தனமாக தள்ளி விழுத்தியதற்காக பிளாக்பூலின் இவாட் சிவப்பட்டை கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஷாவின் கோல் போட்டார். 39வது நிமடத்தில் வால்காட் இன்னுமொரு கோலடிக்க இடைவேளையின் போது ஆர்சனல் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.


48வது நிமிடத்தில் டயபி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலானது. 58வது நிமிடத்தில் டயாபி பாஸ் செய்த பந்தை தியோ வால்காட் கோலாக்கி ஹாட்ரிக் கோலைப் பெற்றார். 82வது நிமிடத்தில் வான் பெர்ஸி அடித்த கோர்னர் கிக்கை சமக் தலையால் முட்டி இங்கிலீஸ் பிரீமியர் லீகில் தனது கன்னி கோலைப் போட்டார்.

நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

பர்மிங்ஹம் 2 - 1 பிளாக்பர்ன்

எவர்டன் 1 - 1 வுல்வ்ஸ்

டொட்டன்ஹம் 2 - 1 ஸ்டோக் சிட்டி

வெஸ்ட் ப்ரோம்விச் 1 - 0 சன்டர்லான்ட்

பொல்டன் 3 - 1 வெஸ்ட் ஹாம்

செல்சீ மீண்டும் அபார வெற்றி !!!

இங்கிலிஷ் பிரீமியர் லீக் நடப்பு சாம்பியன் செல்சீ வீகான் அத்லெட்டிக்குடனான போட்டியில் 6-0 என அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. போட்டியின் ஆரம்ப நிமிடத்தில் வீகானின் ரொலடெகா அடித்த ப்றீ கிக் மயிரிழையில் தவறியது. 33வது நிமிடத்தில் செல்சீயின் ப்ராங் லாம்பார்ட் பாஸ் செய்த பந்தை புளோரன்ட் மலூடா கோலாக்கினார். 2வது பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிக்கலஸ் அனெல்கா கோலடித்து கோல் எண்ணிக்கையை 2-0 என உயர்த்தினார். 51வது நிமடத்தில் மலூடா கோலை நோக்கி அடித்த பந்தை ட்ரொக்பா தலையால் முட்ட அதை கோல் கம்பத்துக்கு அருகே இருந்த அனெல்கா முட்டி கோல் போட்டார்.

70வது நிமிடத்தில் பதில் வீரராக களமிறக்கப்பட்ட செல்சீயின் காலூ அதிரடியாக விளையாடி 77வது, 89து நிமிடங்களில் கோல் போட்டு பிரீமியர் லீகில் செல்சீயின் பலத்தை வெளிப்படுத்தினார். 5வது கோல் போட்ட மறு நிமிடமே 6வது கோலும் போடப்பட்டது. ட்ரொக்பா நேர்த்தியாக பாஸ் செய்த பந்தை பெரெயிரா லாவகமாக காலால் பின்னால் தட்ட அதைப்பெற்ற இன்னொரு பதில் வீரரான பெனாயுன் கோல் போட்டார்.

Friday, August 20, 2010

வெற்றியுடன் தொடங்கியது பேயர்ன்!!!

48வது பன்டஸ்லீகாவின் ஆரம்பப் போட்டியில் நேற்று மோதிய நடப்பு சாம்பியன் பேயர்ன் மியூனிச், வுல்வ்ஸ்பேர்க் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. பேயர்ன் மைதானத்தில் நடந்த இப் போட்டியில் 6வது நிமிடத்தில் பேயர்னின் ரிபெரி கோலடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். எனினும் மூன்று நிமிடங்கள் கழித்து பேயர்னின் க்ரூஸின் பாஸைப் பெற்று தோமஸ் முல்லர் கோலடித்து அசத்தினார். இடைவேளையின் போது பேயர்ன் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

55வது நிமிடத்தில் வுல்வ்ஸ்பேர்கின் மிஸிமூவிக் அடித்த பந்து பேயர்ன் கோல்காப்பாளர் பட்டின் கையில் பட்டு வெளியேற வுல்வ்ஸ்பேர்கிற்கு கோர்னர் கிக் கிடைத்தது. கோர்னரை மிஸிமூவிக் அடிக்க அதை அவ்வணியின் ட்ஸெகோ தலையால் முட்டி கோலாக்கினார். 90 நிமிடங்கள் முடிந்த மேலதிக நேரத்தில் ரிபெரி பாஸ் செய்த பந்தை பேயர்னின் பாஸ்டியன் ஸ்வைன்ஸ்டைகர் கோலடித்து கடைசி தறுவாயில் பேயர்னின் வெற்றிக்கு வழிவகுத்தார். இவ்வெற்றியால் பேயர்ன் 3 புள்ளிகள் பெற்தோடு, வுல்வ்ஸ்பேர்க் போட்டியை டிரா செய்து 1 புள்ளியைப் பெறும் வாய்ப்பையும் பரிதாபகரமாக இழந்தது.

Thursday, August 19, 2010

தொடங்குகிறது பன்டஸ்லீகா !!!

ஜெர்மனி நாட்டின் லீகான பன்டஸ்லீகா போட்டிகள் இன்று தொடங்கவிருக்கின்றன. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான பேயர்ன் மியூனிச் அணியும் அதன் பரம விரோதியாக கருதப்படும் வுல்வ்ஸ்பேர்க் அணியும் மோதவுள்ளன. 2008ம் ஆண்டு நடந்த போட்டிகளில் பேயர்ன் மியுனிச் வுல்வஸ்பேர்குடனான முதல் போட்டியில் 4-2 என வென்றாலும், இரன்டாவது போட்டியில் 5-1 என தோற்க வுல்வ்ஸ்பேர்க் சாம்பியனானது. ஆனால் கடந்த வருட போட்டிகளில் இரன்டிலும் வுல்வ்ஸ்பேர்கை தோற்கடித்து பேயர்ன் சாம்பியனானது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களை விறுவிறுப்புக்கு உள்ளாக்கியுள்ளது.


கடந்த ஆண்டு போட்டியின் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட பேயர்னின் அர்ஜான் ரொபர்ன் கால் காயம் காரணமாக அடுத்து வரும் சில போட்டிகளில் விளையாடமாட்டார். இதனால் இந்த வருட உலகக் கோப்பையின் தங்கப் பாதணி வீரர் தோமஸ் முல்லர் இன்று க்ருஸ், ரிபெரி, குளோஸ் ஆகியோருடன் சேர்ந்து முன்கள வீரராக விளையாடுவார். வுல்வ்ஸ்பேர்க் கோல்கப்பாளர் டியாகோ பெனாலியோ தனது மனைவியின் பிரசவத்துக்காக சென்றிருப்பதால் அவருக்குப் பதிலாக மார்வின் ஹிட்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, August 16, 2010

வெற்றியுடன் ஆரம்பித்தது மான்செஸ்டர் யுனைட்டட் !!

ஆங்கில பிரீமியர் லீகில் நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டட் அணி நியுகாஸ்டல் யுனைட்டட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் மான்செஸ்டரின் போல் சோலஸ் பாஸ் செய்த பந்தை பெற்றுக் கொண்ட பேர்படோவ் கோலடிததார். மான்செஸ்டரின் நட்சத்திர வீரரான வேயன் ரூனிக்கு கோல் அடிக்க வாய்ப்புக்கள் கிடத்தும் தவற விட்டார்.

41வது நிமிடத்தில் ப்ளெட்சர் கோலடிக்க இடைவேளையின் போது 2 கோல்களால் மான்செஸ்டர் முன்னிலை பெற்றிருந்தது. 71வது நிமிடத்தில் பதில் வீரராக களமிறக்கப்பட்ட கிக்ஸ் 14 நிமிடங்கள் கழித்து சோலஸ் அடித்த பந்தை கோலாக மாற்றி அசத்தினார். 2 கோலடிக்க உதவிய சோலஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ் வெற்றியின் காரணமாக மான்செஸ்டர் யுனைட்டட் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை அடைந்நிருக்கிறது.

தோல்வியைத் தவிர்த்தது ஆர்சனல் !!

லிவர்புல், ஆர்சனல் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டன. சொந்த ஊரில் விளையாடிய லிவர்புல் ஆரம்பந் தொடக்கம் அருமையாக செயற்பட்டு முன்னிலை வகித்தது. அவ்வணி சார்பாக நொக் 46வது நிமிடத்தில் கோல் போட்டார்.


90வது நிமிடமும் கடந்து மேலதிக நிமிடங்கள் போய்க்கொண்டிருந்தது. எல்லோரும் லிவர்புலின் வெற்றியைக் கொண்டாட காத்திருந்த போது ஆர்சனலின் சமக் அடித்த பந்து லிவர்புல் கோல்காப்பாளர் ரெய்னாவின் கையில் பட்டும் எதிர்பாராத விதமாக கோல் எல்லையைக் கடந்து சேம்சைட் கோலாக மாறியது. லிவர்புல் அணியின் ஜோ கோல் சிவப்பட்டை காட்டப்பட்டும் ஆர்சனலின் கொசியெல்னி 2வது மஞ்சளட்டை காட்டப்பட்டும் வெளியேற்றப்பட்டனர்.

ஆஸ்டன் விலா பயிற்சியாளராக விரும்பும் மரடோனா !!


ஆர்ஜென்டீனா அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மரடோனா இங்கிலாந்தின் ஆஸ்டன் விலா அணியின் பயிற்சியாளராக மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண காலிறுதியில் ஜெர்மனியிடம் 4-1 என ஆர்ஜென்டீனா தோல்வியடைந்ததால் இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக்கப் பட்டிருந்தார். அவரது உதவியாளரான சேரியானோ கூறுகையில், "மரடோனா ஆங்கில உதைபந்தாட்டத்தின் மீது விருப்புக் கொண்டவர். நான் இங்குள்ள பல ஆங்கில கிளப் அணி தலைமையிடங்களில் பேசி வருகிறேன். எனினும் ஆஸ்டன் விலா வருவதையே டியாகோ வலியுறுத்தி வருகிறார்."

Sunday, August 15, 2010

வெற்றியுடன் தொடங்கியது செல்சீ !!!

இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டிகள் நேற்றுத் தொடங்கின. நேற்று விளையாடிய நடப்பு சாம்பியன் செல்சீ வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியான் அணியை 6-0 எனும் பாரிய கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப் போட்டியில் டிடியர் டிரோக்பா 3 கோல்களும், ப்ராங் லாம்பார்ட் 2 கோல்களும், புளோரன்ட் மலூடா 1 கோலும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இவ் அபார வெற்றியின் காரணமாக செல்சீ தற்போது புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.



நேற்று நடந்த ஏனைய போட்டிகள்-

மான்செஸ்டர் சிட்டி 0 - 0 டாட்டன்ஹாம்

ஆஸ்டன் வில்லா 3 – 0 வெஸ்ட் ஹாம்

சன்டர்லான்ட் 2 – 2 பர்மிங்ஹாம்

பிளாக்பர்ன் 1 – 0 எவர்ட்டன்

வுல்வர்ஹாம்டன் 2 – 1 ஸ்டோக்சிட்டி

பிளாக்புல் 4 – 0 வீகான் அத்லெடிக்

பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வி !!


ஸ்பானிஸ் சூப்பர் கப் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லீக் சாம்பியன் பார்சிலோனா அணி செவிலா அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டது.


ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஸ்லடான் இப்ராஹிமூவிக் கோலடிக்க பார்சிலோனா அணி முதற்பாதியில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் செவிலாவுக்காக விளையாடும் பிறேசில் வீரர் லூயிஸ் பாபியானோ கோலடித்து கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். பின்பு 73வது, 82வது நிமிடங்களில் பெடரிக் கனோடி இரட்டைக் கோலடிக்க செவிலா அணி 3-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.

Thursday, July 22, 2010

டொரஸ் தொடர்வது கேள்விக்குறியே !

ஸ்பெயின் அணி வீரரான பெர்னான்டோ டொரஸ் லிவர்புல் அணியில் நிலைத்திருப்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் ஹொட்ஜ்ஸன் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் தாறுமாறான தோல்விகளையடுத்து லிவர்புல் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹொட்ஜ்ஸன் நியமிக்கப் பட்டிருந்தார். இவர் ஜோ கோலை அணிக்காக ஒப்பந்தம் செய்தமையானது அணி ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மற்றொரு வீரரான டொரஸின் நிலைமை சந்தேகமாகவே உள்ளது.

டொரஸ் அத்லெடிக்கோ மட்ரிடிலிருந்து விலகி இவ் அணியில் இணைந்த ஓரிரு சீசன்களுக்கு சிறப்பாக செயற்பட்டிருந்தாலும், பின்னர் அவரால் அவ்வளவு பெரிதாக விளையாட முடியவில்லை. நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் சோபிக்காததால் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளானார். சென்ற வருடத்தோடு அவரது ஒப்பந்தம் முடிந்திருந்தது. இந் நிலையில் “டொரஸ் தொடர்ந்தும் இங்கேயே விளையாடவே நான் விரும்புகிறேன். அவர் இருந்தால் அணியை இன்னும் வலுப்படுத்தலாம்” என ஹொட்ஜ்ஸன் கூறியுள்ளார்.



19வது தடவையாகவும் வெல்வோம் – ப்ளெட்ச்சர்

ஆங்கில பிறீமியர் லீகில் இந்த முறை வென்று, 19வது தடவையாகவும் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை புரிவோம் என மான்செஸ்டர் யுனைட்டட் வீரரான ப்ளெட்ச்சர் கூறியுள்ளார்.

ஆங்கில பிறீமியர் லீகில் லிவர்புல், மான்செஸ்டர் யுனைட்ட் என்பன தலா 18 முறை கிண்ணத்தைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றன. மான்செஸ்டர் யுனைட்டட் கடந்த லீகில் 1 புள்ளி வித்தியாசத்தில் செல்சீயிடம் கோப்பையை கோட்டை விட்டது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

“ நாங்கள் எப்போதுமே சாதனைகளைத் தகர்க்கவே விரும்புகிறோம். கடந்த சீசனில் பெற்ற அடி எங்களுக்குத் தகுந்த பாடமாக அமைந்து விட்டது. இம்முறை எமது அணி பலமாகவே களமிறங்கும். கிக்ஸ், சோலஸ் போன்ற முதிர்ச்சி வீரர்களின் அனுபவம் கை கொடுக்கும். அவர்களது அறிவுரைகளின் படி நான், ரூனி, ஓ’ஸீ, பிரவுன் போன்றோர் முழுமூச்சுடன் செயற்படுவோம்” எனக் கூறினார்.

அங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடித்த மான்செஸ்டர் யுனைட்டட் வீரர்கள் உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடியாக லீகில் நன்கு செயற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Wednesday, July 21, 2010

எந்த மாற்றமும் இல்லை – ரொனால்டினோ, சில்வா, ஜெரார்ட்

ரொனால்டினோ, சில்வா இருவரும் ஏ.சி மிலானில் தொடர்ந்து விளையாடுவார்கள் என அந்த அணியின் தலைவர் புர்லுஸ்கானி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் பெக்கம், ரொனால்டினோவை கலக்சிக்கு வருமாறு விடுத்த அழைப்பையடுத்து ஏ.சி மிலான் அணித் தலைவர் ரொனால்டினோவுடன் புதிய ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவ்வொப்பந்தத்திற்கு ரொனால்டினோ சம்மதித்து விளையாட ஒப்புக் கொண்டுள்ளார். இதே போல் அவ்வணியின் பிறேசில் வீரரான தியாகோ சில்வாவும் வேறு அணிக்கு மாற்றப்பட மாட்டார் எனக் கூறப்படுகின்றது.

இன்னொரு புறம் ரியல் மட்ரிட்டால் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்டுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரித்த அவர்,

“நான் இப்போது லிவர்பூலில் இருந்து மாறுவதாக இல்லை. எனது நண்பரான ஜோ கோலின் வருகை எங்களுக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது.. இந்த சீசனில் லிவர் பூலை பிறீமியர் லீக் சம்பியனாக்குவதே என் கனவு” எனக் கூறியுள்ளார்.


Tuesday, July 20, 2010

பலமாகும் ரியல் மட்ரிட் !!!

mourinhoகடந்த ஆன்டு ஸ்பெயினின் லா லீகாவில் இறுதிப் போட்டியில் பார்சிலோனாவிடம் தோற்று 2ம் இடத்தைப் பெற்ற ரியல் மட்ரிட் இந்த சீசனில் பலமிக்க அணியாக வருகை தரவுள்ளது.

ரியல் மட்ரிட் ஏற்கெனவே சிறப்புமிக்க திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது.

· இகர் கஸில்லஸ் (ஸ்பெயின்)

· கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்)

· காகா (பிறேசில்)

· ஹிக்வாயின் (ஆர்ஜென்டீனா)

· செர்ஜியோ ரேமொஸ் (ஸ்பெயின்)

இவர்களுல் காகா, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2007ம், 2008ம் ஆண்டுகளுக்கான சிறந்த வீரர் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. இகர் கஸில்லஸ் இந்த தசாப்தத்தில் உலகின் மிகச்சிறந்த கோல் காப்பாளராக விளங்குகிறார். ரேமொஸ் கஸ்ட்ரோல் நிறுவனத்தால், நடந்து முடிந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த வீரராக கருதப்படுகிறார். ஹிக்வாயின் இவ்வுலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுக்காக 5 போட்டிகளில் 4 கோல்கள் போட்டிருந்தார்.

2009 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை இன்டர் மிலான் சுவீகரிக்கும் போது அதன் பயிற்றுவிப்பாளராக இருந்த மோரின்ஹோ, தற்போது ரியல் மட்ரிட்டின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவரது அனுபவமும் இம்முறை அணிக்கு கைகொடுக்கலாம். இவர் அணியின் குறை நிறைகளை ஆராய்ந்து மேலும் பல வீரர்களை சேர்க்க உள்ளார்.

ரியல் மட்ரிட் அணி ஊஸில், லாம், ஸ்வைன்ஸ்டைகர் ஆகிய ஜெர்மனி வீரர்களுல் ஒருவரையாவது இம்முறை எடுத்து விடும் எனக் கருதப்படுகிறது. அது மட்டுமல்லாது அணியின் தடுப்புப் பகுதியை பலமூட்ட பிறேசிலின் மிகச் சிறந்த வீரரான மெய்க்கானை சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்டர் மிலான் பட்டம் வெல்வதில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே வரப் போகும் சீசன் ரியல் மட்ரிட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கப் போவது மட்டும் உறுதி!!!


Saturday, July 17, 2010

ரொனால்டினோ லொஸ் ஏஞ்சல்ஸ் போவதே நல்லது – பெக்கம்

பிறேசில் அணி நட்சத்திரமான ரொனால்டினோ சமீப காலமாக சிறப்பாக செயல்படாமையாலும் உடற்கோப்பு இல்லாமையாலும் பயிற்சியாளர் துங்காவால் நீக்கப் பட்டார். இதனால் இவர் இவ்வுலகக் கோப்பை போட்டிகளில் விளையாடாதமை குறிப்பிடத் தக்கது.

தற்போது ஏ.சி மிலான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப் பட்ட இவரை, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கலக்சி அணிக்காக விளையாடுமாறு நெருங்கிய நண்பரும் பிரபல இங்கிலாந்து வீரருமான டேவிட் பெக்காம் அறிவுரை வழங்கியுள்ளார். எனினும் மிலான் அணியின் நிர்வாகி ரொனால்டினோவை சந்தித்து அவரது ஒப்பந்தத்தை 2011இலிருந்து 2013 ஆக நீட்டிக்க கலந்தாலோசிப்பார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டினோ,

“ எனது தம்பிக்கு மிலானில் தங்கவே ஆசையாக உள்ளதாக கூறுகிறான். எனினும் எல்லோருடனும் கலந்தாலோசித்த பின்பே எனது முடிவை வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.


ஜெர்மனி வீரர்களைத் துரத்தும் ரியல் மட்ரிட்


உலகிலே அதிக எண்ணிக்கையான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ரியல் மட்ரிட் கழக அணி ஜெர்மனி சார்பாக விளையாடி உலகக் கோப்பையில் பிரகாசித்த மெஸட் ஊஸிலை சேர்த்துக் கொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறது. மெஸட் தற்போது ஜெர்மனியின் வெர்டர் பிரமன் கழகத்துக்காக விளையாடி வருகிறார்.


ஆர்ஜென்டீனாவின் ஹிக்வாயின், பிறேசிலின் ககா, ஸ்பெயினின் கஸில்லஸ், போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற தலை சிறந்த வீரர்களைத் தன்னகத்தே கொண்ட ரியல் மட்ரிட் அணியானது ஜெர்மன் வீரரொருவரை சேர்த்துக் கொள்வதன் அணியை மேலும் பலப்படுத்த எண்ணுகிறது. இதற்காக ஊஸில், கெயிட்ரோ, ஸ்வைன்ஸ்டைகர் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ஊஸிலை வாங்குவதிலேயே அதிக விருப்பம் காட்டுவதாக தெரிகிறது.


Friday, July 16, 2010

விலகுகிறார் ஹென்றி ! பிரான்ஸ் எதிர்காலம்??

பிரான்ஸ் அணியின் பிரபல முன்கள வீரரான தியரி ஹென்றி தான் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கோப்பையில் முதல் சுற்றுடனேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்
“பிரான்ஸ் அணியுடனான எனது காலம் முடிவுக்கு வந்துள்ளது. நான் இவ்வணிக்காக விளையாடியது குறித்து என்றுமே பெருமிதமடைவேன். பிரான்ஸ் அணி இன்னும் வலுவான அணியொன்றாகவே உள்ளது.”
தியரி ஹென்றி பிரான்ஸ் கால்பந்தாட்ட வரலாற்றிலே தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தலைசிறந்த வீரராவார். இவர் அவ்வணி சார்பாக 116 போட்டிகளில் விளையாடி 52 கோல்களை அடித்துள்ளார். 1998ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமாயிருந்தவர்களுல் இவர் முக்கியமானவர்.

இவரது லீக் சாதனைகளும் கணக்கிலடங்காதவை. ஆர்சல் அணி சார்பாக 256 போட்டிகளில் விளையாடி 170க்கும் மேற்பட்ட கோல்களையடித்து அவ்வணிக்காக அதி கூடிய கோலடித்தவராக திகழ்கிறார். இறுதியாக பார்சிலோனா அணிக்கு மாற்றப் பட்ட இவர் அங்கும் பல கோல்களை அடித்துள்ளார்.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த ஒருவர் விலகுவதானது பிரான்ஸ் அணிக்கு பாரிய பின்னடைவாகும். பிரான்ஸ் அணி முதலில் பலவீனமான அணியாக இருந்து ஜஸ்ட் பொன்டெய்னின் வரவுக்கு பின் சிறிது பிரபலம் பெற்றது. எனினும் 90களின் பிற்பகுதியில் விளையாடிய ஸிடேன், பெடிட், ஹென்றி போன்ற சிறந்த வீரர்களின் உதவியுடன் 1998 உலக சாம்பியனாகவும், 2000ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனாகவும், 2006 இரன்டாமிடத்தையும் பெற்று கால்பந்தாட்ட உலகின் ஆதிக்க சக்திகளில் தானும் ஒன்று என நிரூபித்தது.
ஆனால் தற்போதுள்ள பிரான்ஸ் அணி உலகக் கோப்பைக்கு தெரிவாகவே திணறிக் கொன்டிருந்தது. அயர்லாந்துடனான போட்டியில் ஹென்றி பந்தைக் கையால் தட்டி கோல் போட உதவியதால், அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பிரான்ஸின் பயிற்றுவிப்பாளர் உலகக் கோப்பை போட்டிகளில் ஹென்றியை பிரதி வீரராகவே களமிறக்கினார். அதனால் இவரால் சரிவர செயற்பட முடியாது போனது. இதுவே கூட பிரான்ஸ் அணி வெளியேறியமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம். எது எப்படியோ பிரான்ஸ் வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Tuesday, July 13, 2010

பிரகாசிக்கத் தவறிய வீரர்கள் !!!

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் முடிவு பெற்று விட்டன. ஸ்பெயின் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நாடு திரும்பியுள்ளது. அப் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வில்லா, முல்லர், இனியெஸ்டா போன்றோர் அனோரது பாராட்டைப் பெற்றுள்ளனர். எனினும் போட்டி தொடங்க முதலே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வீரர்கள் சோபிக்கத் தவறி ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர். உண்மையைச் சொல்லப் போனால் இவர்கள் சோபிக்காமைக்கு காரணமே ரசிகர்கள் இவர்கள் மீது வைத்திருந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்புத்தான். அவ்வாறான ஒரு வீரர்களைத் திருப்பி பார்ப்போம். –

1. லியோனல் மெஸி


ஆர்ஜென்டீனாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், உலகின் முதல் நிலை வீரராகவுமுள்ள இவரைப் பற்றி நன்கறிந்தவர்களுக்கு இப் போட்டித் தொடரில் அவரது ஆற்றல் குறைந்தது போலவே தென்படாது. எனினும் 2009 லீக் இல் பார்சிலோனா அணி சார்பாக 42 கோல் போட்ட இவருக்கு இப் போட்டித் தொடரில் ஒரு கோலேனும் போட முடியாது போனது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. எதிரணி வீரர்கள் இவரையே சுற்றி வளைத்துக் கொண்டிருந்தமையால் இவருக்கு கோல் போடும் வாய்ப்பு குறைவாகவே கிடைத்தது. எவ்வாறாயினும் இவர் கொடுத்த பாஸ்களாலேயே டெவேஸ், ஹிக்வாயின் போன்றோர் கோலடிக்க முடிந்தமையும் மறுக்க முடியாதது.


2. கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரசிகர்களால் CR7 என செல்லமாக அழைக்கப்படும் இவர் எதிரணியினரைத் திக்குமுக்காடச் செய்யும் ஆட்டத்திற்குப் பெயர் போனவர். இவறது திறமை காரணமாகவே ரியல் மாட்ரிட் இவரை 80 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியது. அவ்வணி சார்பாக முதல் சீசனில் 35 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டு சாதனை படைத்தார். 2006 போர்த்துக்கல் வரை முன்னேற முக்கியமான காரணமே இவர்தான் என அறியாத சிலர் எனினும் போர்த்துக்கல் அணிக்காக இவரது திறமை வெளிக் கொண்டு வரப்படுவதில்லை எனக் குற்றஞ் சாட்டுகின்றனர். இம் முறை அவ்வணியின் தலைமைப் பொறுப்பு இவரிடம் கையளிக்கப்பட்டிருந்ததால் இவரால் முன்னர் போல வேகமாகவும், அசால்ட்டாகவும் விளையாட முடியவில்லை அதனால் இம் முறை ஒரே ஒரு கோலையே போட்டிருந்தார்.


3. வேயன் ருனி
பெக்கம் இல்லாத இங்கிலாந்து அணியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவரின் தலையிலேயே கட்டப்பட்டிருந்தது. லாம்பார்ட், ஜெரார்ட், பேர்டினான்ட் போன்ற சிறந்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருந்தும் அவர்களது திறமைகளை ஒருங்கிணைக்க முடியாது போனதால் அவ்வணி வெளியேறியது. இவர் ஜெர்மனியுடனான போட்டியில் கோல் போடாதது குறித்து ரசிகர்கள் கூச்சல் எழுப்பியபோது, இவர் கமராவைப் பார்த்து ரசிகர்களைத் திட்டியதால் ரசிகர்களிடையே மதிப்பும் இழந்து நிற்கிறார். இவரும் இப் போட்டித் தொடரில் ஒரு கோலையும் போடவில்லை.


4. பெர்னான்டோ டொரஸ்
ஸ்பெயின் இம்முறை உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தாலும் அதில் இவரது பங்களிப்பு மிகக் குறைவு என்பதே உண்மையாகும். 2008 ஸ்பெயின் அணி ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லக் காரணமாக அமைந்த பின்பு இவரிடத்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்தகுத் தக்கவாறு இவரும் லீக் சீசனில் சிறப்பாகவே ஆடி வந்தார். எனினும் உலகக் கோப்பைக்கு வந்த பின்பு எல்லாம் சொதப்பத் தொடங்கியது. கோலடிக்க அதிக வாய்ப்புக்கள் கிடைத்த போது அவற்றை வீணடித்தார். சக முன்கள வீரரான டேவிட் வில்லா 3..4.. என கோலடித்துக் கொண்டு போகவே இவர் மீதான நம்பிக்கையும் குறைந்து கொண்டே போனது. இறுதியில் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் மாற்று வீரராக களமிறங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப் பட்டார்.


5. ககா
ரொனால்டோ, ரொனால்டீனா வரிசையில் இம்முறை உலகக் கோப்பையில் பிறேசிலின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர்தான் பிறேசில் மத்தியகள வீரர் ககா. சென்றமுறை உலகக் கோப்பையில் ரொனால்டீனோவே தடுமாறியபோது சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வீரராக வலம் வந்தார். லீக் சீசனிலும், தகுதிநிலை ஆட்டங்களின் போதும் தானிருக்கும் அணியின் வெற்றிக்கு உதவியதால் இவர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. எனினும் தவறாக பாஸ் செய்து கொண்டிருந்தமை, முரட்டுத் தனமான ஆட்டத்தில் ஈடுபட்டமை என்பவற்றால் ரசிகர்களுக்கு இவர் மேலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கி, பிறேசில் வெளியேறியதும் இல்லாமல் போனது.