Saturday, August 21, 2010

இத்தாலியன் சூப்பர் கப் சாம்பியனானது இன்டர் !!!

இத்தாலியன் சூப்பர் கப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரோமா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5வது முறையாகவும் இன்டர் மிலான் சாம்பியனானது. இவ் வெற்றியின் மூலம் இத்தாலிய சூப்பர் கப் வரலாற்றில் அதிக முறை கோப்பையை ஜெயித்தோர் பட்டியலில் தமது எதிரி அணியான ஏ.சி மிலான் அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறது. 20வது நிமிடத்தில் ரோமாவின் ஜோன் ஆர்ன் ரைஸ் லாவகமாக பந்தை கோல்வலையின் கீழ் மூலைக்குச் செலுத்தி ரோமா அணியை முன்னிலை பெறச் செய்தார்.


இந்த முன்னிலையை தவறவிடக்கூடாது என்ற திடத்துடனேயே ரோமா அணியினர் விளையாடினாலும் இன்டர் மிலானின் கோரன் பன்தேவ் களத்தடுப்புப் பிழைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோல் போட்டார்.இதனால் இடைவேளையின் போது இரு அணிகளும் 1-1 என சமநிலையிலிருந்தன. எனினும் கமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இன்டரின் சாமுவேல் ஈட்டூ ரோமா கோல் காப்பாளர் பொக்டன் லோபொன்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் 70வது, 80வது நிமிடங்களில் கோல் போட்டு இன்டர்மிலானின் வெற்றியை உறுதி செய்தார்.

No comments:

Post a Comment