Sunday, August 22, 2010

நியுகாஸ்டல் வெற்றி !! மான்செஸ்டர் யுனைட்டட் டிரா !!

ஆஸ்டன் விலாவுடனான முதல் போட்டியில் 6-0 என நியுகாஸ்டல் யுனைட்டட் வெற்றியீட்டியுள்ளது. இப் போட்டியின் 10வது நிமிடத்தில் ஆஸ்டனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதை காரியு அடித்தபோது அப்பந்து கோல்வலைக்கு மேலாக சென்றது. 12வது நிமிடத்தில் நியுகாஸ்டல் மத்தியகள வீரர் பார்டன் 25 அடி தூரத்திலிருந்து கனகச்சிதமாக குறிபார்த்து கோல்போட்டார். 31வது நிமிடத்தில் நியுகாஸ்டலின் கரல், நோலனுக்கு பாஸ் செய்ய நோலன் அவ்வணியின் 2வது கோலைப் போட்டார். அடுத்த 3வது நிமிடத்தில் ஆன்டி கரல் கோல் போட இடைவேளைக்குள் நியுகாஸ்டலின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.

67வது நிமிடத்தில் பார்டன் அடித்த கோர்னரை வில்லியம்சன் கரலுக்கு பாஸ் செய்ய அவர் தனது 2வது கோலை 15 அடி தூரத்திலிருந்து போட்டார். 20 நிமிடங்கள் கழித்து நோலன் நியுகாஸ்டலின் 5வது கோலை கோல்கம்பத்துக்கு அருகிலிருந்தவாறே சாமர்த்தியமாக போட்டார். இது போதாதென்று 90வது நிமிடத்தில் ஆன்டி கரல் கோல் போட்டு தனது ஹாட்ரிக்கை பதிவு செய்தார். இது இந்த பிரீமியர் லீக் சீசனின் 3வது ஹாட்ரிக்காகும்.



இரன்டாவதாக நடந்த மான்செஸ்டர் யுனைட்டட் - வுல்ஹாம் போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது. போட்டி தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைட்டடின் போல் சோலஸ் 25வது அடி தூரத்திலிருந்து குறி பார்த்து கோல் வலையின் இடது கீழ்மூலைக்கு அடித்து கோல் போட்டார். இது அவர் மான்செஸ்டர் யுனைட்டட் அணி சார்பாக அடிக்கும் 150வது கோலாகும். இடைவேளையின் பின் வுல்ஹாம் அணியினர் புது உத்வேகத்துடன் விளையாடத் தொடங்கினர். 57வது நிமிடத்தில் அவ்வணியின் சமோரா பின்னால் பாஸ் செய்த பந்தை சைமன் டேவிஸ் விரட்டிச் சென்று கோல்போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

84வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைட்டட்டிற்கு கிடைத்த கோர்னர் கிக்கை கிக்ஸ் அடிக்க பந்து போய் வுல்ஹாம் அணியின் ஹங்கலான்டின் முழங்காலில் பட்டு கோல் வலையுள் புகுந்து சேம்-சைட் கோலானது. மான்செஸ்டர் யுனைட்டட் பெற்ற 2-1 முன்னிலையை வைத்து வெற்றி பெற முயற்சித்துக் கொண்டிருக்கையில், 89வது நிமிடத்தில் ஹங்கலான்ட் தான் விட்ட பிழைக்கு பிரதியுபகாரமாக கோர்னர் கிக்கை தலையால் முட்டி கோல்போட்டார். இதனால் இறுதி தறுவாயில் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டது வுல்ஹாம்.

No comments:

Post a Comment