பிரான்ஸ் அணியின் பிரபல முன்கள வீரரான தியரி ஹென்றி தான் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கோப்பையில் முதல் சுற்றுடனேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்
“பிரான்ஸ் அணியுடனான எனது காலம் முடிவுக்கு வந்துள்ளது. நான் இவ்வணிக்காக விளையாடியது குறித்து என்றுமே பெருமிதமடைவேன். பிரான்ஸ் அணி இன்னும் வலுவான அணியொன்றாகவே உள்ளது.”
தியரி ஹென்றி பிரான்ஸ் கால்பந்தாட்ட வரலாற்றிலே தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தலைசிறந்த வீரராவார். இவர் அவ்வணி சார்பாக 116 போட்டிகளில் விளையாடி 52 கோல்களை அடித்துள்ளார். 1998ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமாயிருந்தவர்களுல் இவர் முக்கியமானவர்.
இவரது லீக் சாதனைகளும் கணக்கிலடங்காதவை. ஆர்சல் அணி சார்பாக 256 போட்டிகளில் விளையாடி 170க்கும் மேற்பட்ட கோல்களையடித்து அவ்வணிக்காக அதி கூடிய கோலடித்தவராக திகழ்கிறார். இறுதியாக பார்சிலோனா அணிக்கு மாற்றப் பட்ட இவர் அங்கும் பல கோல்களை அடித்துள்ளார்.
இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த ஒருவர் விலகுவதானது பிரான்ஸ் அணிக்கு பாரிய பின்னடைவாகும். பிரான்ஸ் அணி முதலில் பலவீனமான அணியாக இருந்து ஜஸ்ட் பொன்டெய்னின் வரவுக்கு பின் சிறிது பிரபலம் பெற்றது. எனினும் 90களின் பிற்பகுதியில் விளையாடிய ஸிடேன், பெடிட், ஹென்றி போன்ற சிறந்த வீரர்களின் உதவியுடன் 1998 உலக சாம்பியனாகவும், 2000ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனாகவும், 2006 இரன்டாமிடத்தையும் பெற்று கால்பந்தாட்ட உலகின் ஆதிக்க சக்திகளில் தானும் ஒன்று என நிரூபித்தது.
ஆனால் தற்போதுள்ள பிரான்ஸ் அணி உலகக் கோப்பைக்கு தெரிவாகவே திணறிக் கொன்டிருந்தது. அயர்லாந்துடனான போட்டியில் ஹென்றி பந்தைக் கையால் தட்டி கோல் போட உதவியதால், அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பிரான்ஸின் பயிற்றுவிப்பாளர் உலகக் கோப்பை போட்டிகளில் ஹென்றியை பிரதி வீரராகவே களமிறக்கினார். அதனால் இவரால் சரிவர செயற்பட முடியாது போனது. இதுவே கூட பிரான்ஸ் அணி வெளியேறியமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம். எது எப்படியோ பிரான்ஸ் வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
No comments:
Post a Comment