Friday, July 9, 2010

வெல்லப் போவது யார் ?





உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதி நிலையை எட்டி விட்டன. வெல்லப் போவது ஸ்பெயினா? நெதர்லாந்தா? என்ற பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இரு அணிகளும் போட்டிக்குப் போட்டி தமது திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகின்றன.

இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க அணிகள் ஏதும் தகுதி பெறாத நிலையில் வேற்றுக் கண்ட அணியொன்று ஆப்பிரிக்க மண்ணில் சாதிப்பது உறுதியாகியுள்ளது.





வரலாறு

1974ம் 1978ம் ஆண்டுகளில் முதல் நிலை அணியாக விளங்கிய நெதர்லாந்து இரு முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும் ஜெர்மனி ஆர்ஜென்டீனா ஆகியவற்றிடம் பரிதாபகரமாகத் தோற்று வெளியேறியது. இந்த அவமானங்களுக்கெல்லாம் பழி தீர்த்துச் செல்லக் காத்திருக்கிறது.



மறுமுனையில் இதுவரை அரையிறுதிக்கே தெரிவாயிராத ஸ்பெயின் அணி இம்முறை அரையிறுதி வந்ததோடு இறுதிப்போட்டிக்கும் தெரிவாயுள்ளது. 2008ம் ஆண்டு ஐரோப்பியக் கிண்ணத்தை சுவீகரி்த்துள்ளமையால் அணி வீரர்கள் மிகுந்த மனோதிடத்துடன் காணப்படுகின்றனர்.


இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில்
நெதர்லாந்து ஸ்பெயின்
வெற்றி 4 3
டிரா 1 1
கோல்கள் 10 12


அணி வீரர்கள்

நெதர்லாந்து அணி வேகமாகத் தாக்கி அதிகளவு கோல்களைப் போடும் ஒரு அணியாகும். அவ்வணி சார்பாக வெஸ்லி ஸ்னைடர் 5 கோல்களைப் போட்டு முன்னிலை வகிக்கிறார். அவ்வணியின் ரொபர்ன் எதிரணித் தடுப்பாளர்களை ஏமாற்றி லாவகமாக பந்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லக் கூடியவர். அவரது அனுபவம் அவ்வணிக்குப் பக்கபலமாக அமையும். குயிட், வான் பெர்ஸி என்போரும் எதிர்பாராத தருணங்களில் கோலைப் போட்டு ஆட்டத்தின் போக்கையே மயற்றக் கூடியவர்கள். பொமல் எத்தகைய வீரர்களையும் தடுக்கக் கூடியவர். அணித்தலைவர் ப்ரொங்ஹேர்ஸ்ட் உருகுவேயுக்கு எதிராகப் போட்ட கோலை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் குழு –

· கோல் காப்பாளர் – ஸ்டெகலன்பேர்க்

· பின்களம் – ப்ரொங்ஹேர்ஸ்ட் மதிஜ்ஸென் ஹெயிட்டிங்கா

· மத்திய களம் – பொமல் டி ஜொங் டி வார்ட்

· முன்களம் – ரொபர்ன் ஸ்னைடர் வான் பேர்ஸி குயிட்





ஸ்பெயின் அணிக்கு சாதகமான விடயங்களில் ஒன்று அவ்வணிக் குழாமாகும். கஸில்லஸ் முதல் டொரஸ் வரை ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே உள்ளடக்கிக் காணப்படுகிறது. ஸ்பெயின் அணியின் தலைவரும் கோல்காப்பாளருமான இகர் கஸில்லஸ் இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த கோல் காப்பாளராவார். க்ஸாவி, இனியெஸ்டா ஆகியோர் முன்கள வீரர்களுக்கு கோலடிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் சிறப்பு மிக்கவர்கள். வில்லா 5 கோல்கள் அடித்து தங்கப் பாதணிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளார். ரேமொஸ் களத்தடுப்பில் அனுபவம் மிக்க வீரராக காணப்படுகிறார்.

விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் குழு –

· கோல் காப்பாளர் – இகர் கஸில்லஸ்

· பின்களம் – ரேமொஸ் கப்டிவில்லா புயொல்

· மத்திய களம் – க்ஸாவி இனியெஸ்டா அலோன்சோ

· முன்களம் – வில்லா டொரஸ் பெட்ரோ


No comments:

Post a Comment