Sunday, July 11, 2010

ஜெர்மனிக்கு ஆறுதல் வெற்றி !!!

அரையிறுதியில் ஸ்பெயினிடம் தோல்வி கண்ட ஜெர்மனி அணி 3ம் இடத்திற்கான போட்டியில் உருகுவேயை எதிர் கொண்டு 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. இப் போட்டியில் சுகயீனம் காரணமாக ஜெர்மனியின் குளோஸ் பொடல்ஸ்கி லாம் ஆகியோர் விளையாடவில்லை. இப் போட்டியில் விளையாடாததால் மிரஸ்லவ் குளோஸ் ரொனால்டோவின் 15 கோல் சாதனையை சமன் செய்யும் அரிய வாய்ப்பைத்தவற விட்டார். அரையிறுதியில் பங்கேற்காத உருகுவேயின் சுவாரெஸ் இப் போட்டியில் விளையாடினார்.


போட்டி தொடங்கி 15வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஸ்வெய்ன்ஸ்டைகர் அடித்த பந்தை உருகுவே கோல்காப்பாளர் தட்டிவிட அப்பந்தைப் பெற்றுக் கொண்ட ஜெர்மனியின் முல்லர் அதையடித்து கோலாக்கினார். இக் கோல் அவருக்கு இப்போட்டித்தொடரின் 5வது கோலானது. 9 நிமிடங்கள் கழித்து உருகுவேயின் சுவாரெஸ் பாஸ் செய்த பந்தை கவானி அடித்து கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.





இடைவேளையின் பின் உருகுவேயின் போர்லான் 51வது நிமிடத்தில் கோலடித்தார். சரியாக 5 நிமிடங்கள் கழித்து ஜெர்மனியின் ஜன்சன் கோலொன்றைப் போட ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதன் பின் இரு அணி கோல்காப்பாளர்களும் எதிரணியின் கோல்களைத் தடுக்க பகீரதப் பிரயத்தனம் எடுத்தனர். 81வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கிடைத்த கோர்னரை ஊஸில் அடித்தார். இப்பந்து ப்ரெயிட்ரிக்கின் தலையில் பட்டு பின் லுகானோவின் தலையில் பட்டு இறுதியாக கெய்டிராவின் தலையில் பட்டு கோலானது.



போட்டியில் தோல்வியடைந்தாலும் பல வருடங்கள் கழித்து அரையிறுதி வந்ததன் மகிழ்ச்சியில் உருகுவே வீரர்களும் தொடர்ந்து 2வது முறையாக 3ம் இடத்தையே பெற்றுக் கொண்ட விரக்தியில் ஜெர்மனி வீரர்களும் நாடு திரும்பினர்.

No comments:

Post a Comment